Home » » நிவாரண பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மீது தாக்குதல்! தேடுதல் வேட்டையில் பொலிஸார்! கல்முனையில் சம்பவம் !!!

நிவாரண பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மீது தாக்குதல்! தேடுதல் வேட்டையில் பொலிஸார்! கல்முனையில் சம்பவம் !!!

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுவதற்காக கல்முனை பகுதிக்கு கடமைக்கு சென்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை தாக்கி தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்களை இரவு பகலாக கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் பொதுமக்களின் உதவியுடன் தொடர்ந்து தேடி வருகின்றனர் என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்த தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சிலரால் கல்முனைக்குடி 02, 04ம் பிரிவுகளில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கடமையில் ஈடுபட்டிருக்கும் போது தாக்கப்பட்டு சாய்ந்தமருது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவினை கிரீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள தனது பிரிவு மக்களுக்கு வழங்கும் கடமையில் ஈடுபட்டிருந்தார். இவ்வேளையில் சில நபர்கள் கூட்டமாக வந்து உத்தியோகத்தரிடம் தங்களுக்கும் கொடுப்பனவு வழங்குமாறு கேட்டு அச்சுறுத்தியதுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் பேசியுள்ளனர்.
இதன் போது உத்தியோகத்தர் அந்நபர்களின் கேள்விகளுக்கான பதிலை வழங்கி விட்டு திரும்பும் போது குறித்த நபர்கள் அவரை தாக்கியுள்ளனர். அந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை தாக்குதலுக்குள்ளான உத்தியோகத்தரை அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் நேற்றைய தினம் சாய்ந்தமருது வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டார். மேலும் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்யுமாறு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு தான் கொண்டு வருவதாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் இதன்போது தெரிவித்தார். மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.எம்.வஹாப் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் உத்தியோகத்தரை சாய்ந்மருது வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டனர்.
இத்தாக்குதல் சம்பவம் குறித்து சங்க பிரதிநிதிகள் தொலைபேசி ஊடாக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திலகரியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி திலகரி குறித்த உத்தியோகத்தரிடம் நடந்த சம்பவத்தை தொலைபேசி ஊடாக கேட்டறிந்து கொண்டதுடன் இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |