Home » » வடக்கின் தற்போதைய நிலை! ஆளுநர் சாள்ஸிற்கு அவசரமாக எழுதப்பட்ட கடிதம்

வடக்கின் தற்போதைய நிலை! ஆளுநர் சாள்ஸிற்கு அவசரமாக எழுதப்பட்ட கடிதம்

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில், உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வடக்கின் ஆளுநருக்கும் அரசாங்க அதிபருக்கும் வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவசர கடிதம் எழுதியுள்ளார்.
குறித்த கடிதமானது, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸிற்கும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், க.மகேசனுக்கும், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ கடந்த மாத ஆரம்பத்திலிருந்து கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமுல் செய்யப்படும் ஊரடங்குச் சட்டம் மற்றும் சுய தனிமைக் கட்டுப்பாடுகள் என்பனவற்றை எதிர்கொள்வதில் வடமாகாண மக்கள், பொதுவாகவும் யாழ். மாவட்ட மக்கள் குறிப்பாகவும் முகங்கொடுக்கின்ற சில பிரச்சினைகள் தொடர்பாக இந்தக் கடிதம் தங்களுக்கு எழுதப்படுகிறது.
மாவட்ட ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் மக்கள் பிரதிநிதிகளாகப் பேசக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில் மாவட்ட ரீதியாகவும், மாகாண ரீதியாகவும் மக்கள் சார்பில் பேசக்கூடிய மாகாண சபை உறுப்பினர்கள் இல்லாத நிலையில் யாழ்ப்பாண மாவட்டம் சார்ந்தும் மாகாணம் சார்ந்தும் பேசவேண்டிய பொறுப்பும் உரிமையும் ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்து பதவியில் இருப்பவன் என்ற வகையிலும் பின்வரும் விடயங்களை தங்களது செயற்பாட்டு நடவடிக்கைக்காக முன்வைக்கப்படுகிறது.
தற்போதைய சூழ்நிலையில் எழுந்துள்ள விடயங்கள் எமது மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் கையாளுகின்ற முறை பற்றி எந்த விமர்சனத்தையும் நான் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால் சில ஊடகச் செய்திகளின் படி சில அரசியல்வாதிகள் அரச அலுவலர்களது செயற்பாடுகளில் தலையீடு செய்வதான நிலை கண்டிக்கத்தக்கது.
அவ்வாறன நிலைகளை தவிர்த்து அரசாங்க அலுவலர்கள் அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவை தங்கள் ஊடாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மட்டும் அமுல்செய்வதையும் பாதிப்புக்குள்ளானோருக்கு உதவ விரும்புபவர்கள் தங்களிடம் வழங்கும் பொருட்கள் அல்லது நிதி தங்களுடைய பணிப்பிற்கமைய நிறைவேற்றப்படுவதையும் வேறெந்த அரசியல்வாதியும் அவற்றில் தலையீடு செய்யாதிருப்பதை உறுதி செய்யுமாறும், அவ்வாறான நெருக்குதல் அலுவலர்களுக்கு ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பும் கடமையும் தங்களுடையது என்பதை ஒரு முன்னாள் அரச அதிகாரி என்ற வகையில் வலியுறுத்த விரும்புகின்றேன்.
ஜனாதிபதியினுடைய பணிப்பின் பேரில் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் இன்னும் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது. அவ்வாறான நிலையை சீர்செய்து சகல நிவாரண உதவிகளும் எல்லோரையும் சென்றடைவதை மீளாய்வு முறையில் உறுதி செய்யுமாறு வேண்டுகிறோம்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, மா, சீனி, பருப்பு போன்ற விடயங்கள் மட்டுமல்லாது ஏனைய பொருள்களையும் மக்கள் சிரமமின்றி பெற்றுக்கொள்ளக்கூடிய வழிவகைகள் உடனடியாக அமுல்படுத்தப்படவேண்டும். எமது பிரதேச வர்த்தகர்கள் தம்மால் இயன்ற சேவைகளை வழங்குகின்றபோதும் அவற்றில் காணப்படும் குறைபாடுகள் அல்லது போதாமை தொடர்பாக கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
யுத்த காலத்தில் கூடுதலாக நிவாரண விநியோகங்களில் கூட்டுறவுத் துறை ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. ஆனால் தற்பொழுது முழுமையாகச் செயற்படுவதற்கான நிதி வசதி இல்லாமை ஒரு பிரச்சினையாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்குகின்றமையை காணக்கூடியதாக உள்ளது. ஆகவே இச்சங்கங்களின் நிர்வாக இயலுமையைப் பரிசீலித்து அவர்களுக்கான போதிய கடன் வசதிகளை வழங்கி அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தில் அவற்றை ஈடுபடுத்தலாம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பாக உணவுப் பொருட்களில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலையில் - அதனால் அதிகரித்த விலையும் ஏற்படக் கூடிய சூழ்நிலை உருவாகுவது தவிர்க்கமுடியாததாகும். எனவே போதிய நெல் கொள்வனவை மேற்கொண்டு உள்ளுரில் இருக்கக் கூடிய அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தியை மேற்கொள்வதற்கும் இச்சங்கங்கள் ஊக்கப்படுத்தப்படல் வேண்டும்.
கடன் நிதியைப் பொறுத்த வரையில் அண்மையில் உருவாக்கப்பட்ட கூட்டுறவு அபிவிருத்தி வங்கியிடமிருந்து இவர்களுக்கான கடன் உதவியை பெற்றுக்கொடுக்க முடியும் எனக் கருதப்படுகிறது. பொருத்தமான நடவடிக்கைக்கு முன்னளிக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |