Home » » மரணச் சடங்கிற்குச் சென்றவருக்கு கொரோனா உறுதி! மன்னாரில் முற்றாக முடக்கப்பட்டது கிராமம்

மரணச் சடங்கிற்குச் சென்றவருக்கு கொரோனா உறுதி! மன்னாரில் முற்றாக முடக்கப்பட்டது கிராமம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் இன்று அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்தில் இடம் பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் நோய் ஏற்பட்டு வைத்தியசாலைக்குச் செல்லவில்லை. அந்நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாரபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.


இந்த நிலையில் அவர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நபர், கடந்த 18 ஆம் திகதி மன்னாரிற்கு வருகை தந்திருந்தார். அவர் மன்னாரிற்கு வந்து மூன்று வாரங்களில் கழிந்துள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் தாராபுரம் கிராம மக்களை முடக்கி வைத்துள்ளோம்.
அவர்களுக்கு எதுவும் நோய் அறிகுறிகள் தென்படுகின்றதா?என்பதனை அவதானிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அந்தநபர் இங்கு வந்து நின்ற இரண்டு நாள் காலப்பகுதிக்குள் அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சமூக நோய் பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களுடைய நடவடிக்கைகளுக்கு தாராபுரம் கிராம மக்களும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண ஒத்துழைப்பை வழங்கி உள்ளனர்.
முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் மாவட்டச் செயலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சமடைய தேவையில்லை.
நோய் தொற்றிற்கு அடையாளம் காணப்பட்ட நபர் கடந்த 18 ஆம் திகதி இங்கு வந்துள்ளார்.19 ஆம் திகதி மீண்டும் புத்தளத்திற்கு சென்றுள்ளார். அவர் தாராபுரம் பகுதியை விட்டு எங்கும் செல்லவில்லை.
மரணச்சடங்கில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த அதிகளவானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணத்தினால் குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு நோயாளியும் கொரோனா வைரஸிற்கு உள்ளாகவில்லை.
இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் முடக்கியுள்ளோம். குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் ஏனைய பகுதி மக்களின் இயல்பு நிலையை தொடர்ந்தும் சிறந்த முறையில் பேணுவதற்காக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் பயப்படவோ அல்லது பதற்றப்படவோ தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தாராபுரம் கிராமத்தைச் சுற்றி இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அக்கிராமத்தில் இருந்து வெளியே செல்லவும், உள் நுழையவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சுமார் 500 குடும்பங்கள் வரை இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |