Home » » சாய்ந்தமருது கொடூர தற்கொலைத்தாக்குதல்! புலஸ்தினியின் மரபணுபரிசோதனையில் குழப்பம்

சாய்ந்தமருது கொடூர தற்கொலைத்தாக்குதல்! புலஸ்தினியின் மரபணுபரிசோதனையில் குழப்பம்

ஸ்ரீலங்காவில் கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் போன்றவற்றில் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இரவு சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இரு பிரதான குண்டுவெடிப்புக்களும் மற்றும் துப்பாக்கி சூடும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கொடூரத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோரை தேடி முப்படையினரும் களத்தில் இறங்கிய வேளை அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, நிந்தவூர் , பாலமுனை பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக பிரதேச மக்கள் காவல் துறையினருக்கு தகவல் வழங்கினர். இதே வேளை அவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் ஆபத்தான பல வெடி பொருட்கள், தற்கொலை அங்கிகள் என்பன மீட்கப்பட்டமையை தொடர்ந்து இராணுவத்தினர் சந்தேக நபர்களை பிடிப்பதற்கான தேடுதலை முடுக்கி விட்டனர்.
இதனை தொடர்ந்து சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் சிறியரக வான்களில் வந்து இறங்கிய புதிய நபர்கள் பதட்டத்துடன் காணப்பட்டதை அவதானித்த கிராம மக்கள் குறித்த பகுதியில் கடமையாற்றும் வீதி போக்குவரத்து பொலிஸாருக்கு விடையத்தை கூறிய வேளை சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் சென்ற போது, தங்களை பாதுகாப்பு தரப்பினர் நெருங்கிவிட்டதாக எண்ணி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். இதில் காவல் துறை உத்தியோகத்தர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர்.
விபரீதத்தை உணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்க குறித்த பிரதேசத்தை படையினர் சுற்றிவளைத்திருந்தனர். அவ்வேளை படையினருக்கும் பயங்கரவாதிகளுக்குமிடையே பரஸ்பரம் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதன் பின்னர் தாக்குதல்தாரிகள் தற்கொலை குண்டை வெடிக்கவைத்தனர்.
அதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவரின் நெறிப்படுத்தலுடன் கல்முனை நீதிவான் நீதிமன்றில் பல்வேறு கேள்விகளுக்கு பொலிஸ் பரிசோதகர் ஆர்.எல் சமரவீர வாக்குமூலம் வழங்கி இருந்தார். இதன்போது அவர் தனது வாக்குமூலத்தில் சம்பவம் நடந்த வீடு அதை அண்டிய வெளியிடங்கள் உள்ளடங்கலாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக தமக்கு அறியக்கிடைத்ததாகவும் அவ்விடத்தில் இருந்து தடயப்பொருட்களை சேகரித்ததுடன் காயமடைந்த நிலையில் ஒரு பெண் மற்றும் பெண்குழந்தை ஆகியோரை மீட்டு அம்பாறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் அவர்களிடம் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |