Home » » சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதமையினாலே கடற்படையினருக்கு கொரோனா தொற்று

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதமையினாலே கடற்படையினருக்கு கொரோனா தொற்று


இலங்கை கடற்படையின் பெருந்தொகையானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளமைக்கு, சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றாமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ள இராணுவத்திற்கு, போதுமான அறிவு மற்றும் பயிற்சியில் பற்றாக்குறை ஏற்பட்டமையே இத்தகைய பேரழிவுகளுக்கு வழிவகுப்பதாக சுகாதாரத் துறை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 60 கடற்படையினர் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அண்மையில் நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜா-எல சுதுவெல்ல பகுதியில் தப்பிச் சென்ற கொரோனா தொற்று நோயாளரை தேடும் நடவடிக்கையின் போதே வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தல் செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டபோது, ஜாஎல சுதுவெல்ல பகுதியில் இருந்து சந்தேகத்திற்கிடான பல கொரோனா தொற்று நோயாளர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.

கொரோனா தொற்று சந்தேகநபர்களை தேடி கைதுசெய்திருந்த கடற்படையினர், அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த நிலையில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த நான்காயிரம் கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றை உறுதிப்படுத்துவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், இராணுவத்தினர் பாதுகாப்பு உடைகளை அணிவது உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகிறார்களா என சமூக ஊடகங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் பாதுகாப்புப் படையினருக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
எனினும், அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழிநுட்ப அறிவு இல்லை என்று வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச தாதிய அதிகாரிகள் சங்கம் மற்றும் தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன் ரத்னபிரிய இது தொடர்பில் தெரிவிக்கையில், பாதுகாப்புப் படைகள் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்காது, சுகாதாரத் துறைக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளிகள் மற்றும் தொற்று நோய் சந்தேகநபர்களை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் பெரும்பாலான பாதுகாப்புப் பணியாளர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை ஒரு முகக்கவசம் அல்லது கையுறை மட்டுமே இத்தகைய தொற்றுநோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்காது என சமன் ரத்னபிரிய மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் சில நேரங்களில் தேவையற்ற தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதுகாப்புப் படையினருக்கு முறையான பயிற்சியினை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இதுவல்ல என தெரிவித்துள்ள அவர், இந்த நிலைமைக்கு பொறுப்பேற்க வேண்டியது அரசாங்கமே தவிர பாதுகாப்பு அதிகாரிகள் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |