Home » » கொரோனாவை வைத்து விளையாடாதீர்கள்! மூட்டைகளில் பிணங்களை அள்ள வேண்டிவரும்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனாவை வைத்து விளையாடாதீர்கள்! மூட்டைகளில் பிணங்களை அள்ள வேண்டிவரும்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அதனை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தால், உலகம் முழுக்க பிணங்களை மூட்டைகளில் அள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் ஆதனாம் எச்சரித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசிய போது,
“உலக சுகாதார நிறுவனத்திடம் ஆரம்பத்திலேயே அதிகமான தகவல்கள் இருந்தன. ஆனால் அவர்கள் சீனாவுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர். அவர்களது பல விஷயங்கள் தவறாக இருந்தன.
தொற்று பரவிய ஆரம்ப காலத்தில், சீனாவுக்கு எல்லையை திறந்து வைக்க அறிவுறுத்தினர். அதிர்ஷ்டவசமாக நான் அதை நிராகரித்தேன். அவர்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பது குறித்து சிந்திப்போம்.”

மேலும், அவர்கள் தொடர்ந்தும் சீனாவுக்கு சார்பாகவே செயல்படுகிறார்கள். சீனாவிலிருந்து கொரோனா ஆபத்தானதாக மாறப் போகிறது என்கிற எச்சரிக்கையை கூட அவர்கள் உலகத்திற்கு வழங்கவில்லை. தவறான முடிவினை அவர்கள் எடுத்துவிட்டார்கள் என்றும் ட்ரம்ப் கடுமையாக பேசியிருந்தார்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் ஆதனாம் பதில் அளித்துள்ளார். “ கொரோனாவை வைத்து அரசியல் செய்ய கூடாது. அமெரிக்காவும், சீனாவும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. நாம் மிக மோசமான எதிரியை எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த நேரத்தில் உலக அரசியலை சூடாக்குவது சரியானது கிடையாது.
இப்போது போய் நெருப்போடு விளையாட கூடாது. உலக அரசியலிலும், தேசிய அரசியலும் சண்டை ஏற்பட்டால் பெரிய பிளவு ஏற்படும். இந்த பிளவு வழியாகத்தான் கொரோனா உள்ளே வரும். அங்குதான் கொரோனா வெற்றிபெறும். ஏற்கனவே 60 ஆயிரம் பேருக்கும் அதிகமாக இறந்துவிட்டனர். முதலில் அதை புரிந்து கொள்ளுங்கள், என்று டெட்ராஸ் ஆதனாம் குறிப்பிட்டார்.
இதேவேளை, ட்ரம்பின் எச்சரிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த டெட்ராஸ் ஆதனாம்,
நாம் இங்கு அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மூட்டைகளில் பிணங்களை அள்ளும் நிலை வரும். உங்களுக்கு உங்கள் நாட்டில் அதிக பிண மூட்டைகள் வேண்டும் என்றால், இதை வைத்து அரசியல் செய்யுங்கள். இல்லையென்றால் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு உடனே களமிறங்கி பணியாற்றுங்கள்.
எங்கள் பக்கம் இருக்கும் தவறுகளை நாங்கள் ஆராய்ந்து அதை திருத்திக் கொள்வோம். கொரோனா குறித்து நாம் தெரிந்து கொள்ளாத விடயங்கள் இருக்கிறது.
நாம் பிறரை குற்றஞ்சாட்டி நேரத்தை போக்கிக் கொண்டு இருக்க கூடாது. ஒற்றுமை மட்டும்தான் இந்த கொரோனவை எதிர்கொள்ள ஒரே வழி” என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |