உலகத்தில் 202 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஜப்பானில் நாளை முதல் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 3 ஆயிரத்து 654 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 85 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஜப்பான் முழுவதும் நாளை முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே ,'' ஏப்ரல் 7 முதல் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்யலாம் என எண்ணியுள்ளேன். ஆனால், மற்ற நாடுகளை போல் இல்லாமல் ஜப்பானில் தேசிய அவசர நிலை காலத்திலும் மாகாணங்களில் எல்லைகள் மூடப்படாது’’ என்றார்.
உலகம் முழுவதும் இதுவரை 13 லட்சத்து 42 ஆயிரத்து 758 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 74 ஆயிரத்து 564 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments