Home » » கொடிய உயிர்கொல்லி கொரோனா எப்போது குறைவடையும்? ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்

கொடிய உயிர்கொல்லி கொரோனா எப்போது குறைவடையும்? ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்

மனிதகுலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனோ - covid 19 வைரஸ் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (Ministry of Community Health, Welfare and Education) - சமூக நலம், நலன்பேணல், கல்வி அமைச்சு ஆய்வறிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் 170 க்கு மேற்பட்ட நாடுகள், பிராந்தியங்களில் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் தொற்று காரணமாக இதுவரை (மார்ச் 22) 308 130 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு, 13 444 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையின் ழுழுவிபரம்:
கொவிட்-19 பன்னாட்டளவில் கவலைக்குரிய உலக நலவாழ்வு நெருக்கடிநிலை என்று ஜனவரி 30 அன்றே உலக நலவாழ்வு அமைப்பு கூறியதோடு அது ஒரு பெருந்தொற்று நோய் என்றும் அறிவித்துள்ளது. அதாவது உலகமெங்கும் பரவி பெருந்தொகையான மக்களைப் பாதித்துள்ள நோய் என்று பொருள்.
உலக நலவாழ்வு அமைப்பு தொடர்ந்து கீச்சக வழி (டுவீட்) செய்த இடுகைகளில் ஆழ்ந்த கவலை தெரிவித்தது. 'நோய்க்கிருமி பரவும் வேகமும் அதன் கடுமையும் மட்டுமல்ல இது தொடர்பான செயலின்மையும் கூட தனக்குக் கவலையளிப்பதாக'க் கூறியது.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தக் கடுமையான வழிமுறைகளைக் கையாள்வதில் சீனா வழிகாட்டியது. ஹுபேய் மாகாணத்தில் சற்றொப்ப ஐந்தரை கோடி மக்களைப் பல நாள் அடைத்து வைத்தது. வட இத்தாலியிலும் இதே போன்ற வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன. மேலும் பல நாடுகளும் இவ்வாறே செய்யத் தொடங்கியுள்ளன.
புவிக்கோளத்தின் பல பாகங்களிலும் இயல்பு வாழ்க்கைக்குலைவு எப்படியும் இந்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை நீடிக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. கோடை வந்து வெப்பநிலை உயரும் போது தொற்றுநோய் பெரிதும் தணியக்கூடும் என்று நலவாழ்வு அதிகாரிகள் நம்பினாலும் இந்தக் கருத்துக்கு இப்போதைய நிலையில் உறுதியான சான்று இல்லை.
கிருமியியல் வல்லுநர்கள் தொற்றுநோயியல் வல்லுநர்கள் பலரும் கொவிட்-19 தொற்றுநோயாகப் பரவக்கூடும் என்றும் இன்னும் நீண்ட காலத்துக்கு உலகை வலம் வந்து மனித உயிர்களைப் பெரிய அளவில் பலிவாங்கக் கூடும் என்றும் நம்புகின்றனர்.
தடுப்பு மருந்து செய்யப் பல முயற்சிகள் நடந்தாலும் சற்றொப்ப இன்னும் ஓராண்டு காலத்துக்கு மேல் கழிந்தாலும் எதுவும் மெய்ப்படும் என எதிர்பார்க்கப்படவில்லை.
கொரோனா கிருமிகள் பல விலங்குகளிடம் காணப்பட்டாலும் மனித நலவாழ்வைப் பாதிக்கும் படியான ஏழு வகைகள் உள்ளன. மிகப் பரவலாக இருப்பவை 229E, NL63, OC43, HKU1 இவையே வழக்கமான தடிமன் மூச்சுத் தொற்றுகளுக்கும் மிதமான காய்ச்சல்களுக்கும் காரணமாகின்றன.
சில நேரம் விலங்குகளைத் தொற்றும் கொரோனாக் கிருமிகள் பரிணமித்து மனிதர்களை நலிவுறச் செய்து புதிய மாந்தக் கொரோனாக் கிருமி ஆகி விடலாம். இவற்றில் சில: புதிய கொவிட்-2019, 2003இல் ஏற்பட்ட சார்ஸ் தொற்று நோய்க்குக் காரணமான சார்ஸ்-கொவ் 2012இல் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட மத்தியக்கிழக்கு மூச்சுநோய் அல்லது மெர்ஸ்–கொவ்.
கொவிட்-19 உடன் ஒப்பிட்டால் சார்ஸ் மெர்ஸ் இரண்டிலுமே இறப்பு வீதம் (கிருமித் தொற்றுக்கு ஆளாவோரில் உயிரிழப்போரின் விகிதம்) மிக அதிகம். சார்ஸ் இறப்பு வீதம் 10 விழுக்காடு இன்னுமதிகமாக மெர்ஸ் இறப்பு வீதம் 34 விழுக்காடு.
மாறாக கொவிட்-19 இறப்பு வீதம் 1 முதல் 3.4 விழுக்காடுதான் என்பது இப்போதைய மதிப்பீடு. ஆனால் இந்த மதிப்பீடு மிகவும் தொடக்கநிலைப்பட்ட தரவுகளின் அடிப்படையிலானது. தொற்றுநோயின் செயல்போக்கில் மேலும் தகவல் கிடைக்கும் போது திருத்தம் செய்ய நேரிடலாம்.
நோய்க்கடத்தல் வழிகள்:
முதல் கொவிட்-19 நோய்த்தொற்றுகளை சீன நாட்டின் வூகான் நகரில் உயிர் விலங்கு அங்காடி ஒன்றுடன் தொடர்புபடுத்திச் செய்திகள் வந்தன. ஆனால் கிருமி இப்போது ஆளுக்கு ஆள் பரவி வருகிறது. கொவிட்-19 நோயினால் கடுமையாகப் பாதிப்புற்ற ஒருவர் மற்றவர்களுக்கு அதனைப் பரப்ப வாய்ப்புண்டு. அதனால்தான் இந்த நோயாளர்கள் நலம் பெறும் வரை அல்லது மற்றவர்களுக்கு நோய் தொற்றச் செய்யும் இடர்வாய்ப்பு நீங்கும் வரை அவர்களை (எந்த அளவுக்கு நோய்வாய்ப்பட்டுள்ளார்கள் என்பதைப் பொறுத்து) மருத்துவமனையிலோ வீட்டிலோ தனிமைப்படுத்தி வைக்குமாறு நலவாழ்வு அதிகாரிகள் பரிந்துரைக்கிறார்கள். நடப்பு நிலவரப்படி நோய்க்கிருமி உலகின் சில பகுதிகளில் சமுதாய அளவில் எளிதிலும் நிலையாகவும் பரவிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இருமும் போது அல்லது தும்மும் போது வழக்கமாகச் சிதறும் கிருமித்தொற்றிய சளி அல்லது பெரிய நீர்மத் திவலைகள் கிருமிக் கடத்தலுக்கு முதன்மை வழியாகும். இந்தத் திவலைகள் விழும் மேற்பரப்புகளைத் தொடுவதும் கிருமிக் கடத்தலுக்கு வழிகோலக்கூடும் என்பதால்தான் முறையாக அடிக்கடி கைகழுவும்படி அறிவுறுத்தப்படுகிறது.
1. அடிக்கடி கை கழுவுங்கள்
உங்கள் கைகளை முறையாகவும் முழுமையாகவும் அவ்வப்போது ஆல்ககால் சார்ந்த கைத்தடவியால் தூய்மை செய்யுங்கள். அல்லது வழலையும் (சோப்) நீரும் கொண்டு கழுவுங்கள்.
ஏன்? சோப்பும் நீரும் கொண்டு உங்கள் கைகளைக் கழுவுவது அல்லது ஆல்ககால் சார்ந்த கைத்தடவி பயன்படுத்துவது உங்கள் கைகளில் இருக்கக் கூடிய கிருமிகளை அழித்து விடும்.
2. சமூகத் தொலைவு பேணுங்கள்
உங்களுக்கும் இருமுகிற அல்லது தும்முகிற எவர் ஒருவருக்கும் இடையில் குறைந்தது ஒரு மீட்டர் (3 அடி) தொலைவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஏன்? இருமுகிறவர்கள் அல்லது தும்முகிறவர்கள் மூக்கிலிருந்தோ வாயிலிருந்தோ சிறு நீர்மத் துளிகள் சிதற விடுகிறார்கள். இந்தத் துளிகளில் நோய்க்கிருமி இருக்கக் கூடும். இருமுகிறவர் கொவிட்-19 நோயாளராக இருந்து நீங்கள் அவருக்கு நெருக்கத்தில் இருந்தால் அந்தத் துளிகளை நீங்கள் மூச்சில் இழுத்துக் கொள்ள நேரிடலாம்.
3. கண் காது மூக்கு தொடுவதைத் தவிர்ப்பீர்
ஏன்? கைகள் பல பரப்புகளைத் தொடுவதால் கிருமிகள் ஒட்டிக்கொள்ள வாய்ப்புண்டு. தொற்றிய பின் கைகள் இக்கிருமிகளை உங்கள் கண் காது மூக்குக்கு மாற்றி விடலாம். அங்கிருந்து கிருமி உங்கள் உடலில் நுழைந்து உங்களை நோயாளி ஆக்கி விடக் கூடும்.
4. மூச்சுத் தூய்மை காப்பீர்
நீங்களும் உங்களைச் சுற்றியிருப்பவர்களும் நல்ல மூச்சுத் தூய்மை கடைப்பிடிக்கச் செய்யுங்கள். இருமும் போது அல்லது தும்மும் போது மடித்த முழங்கையால் அல்லது துடைதாளால் வாயையும் மூக்கையும் பொத்திக் கொள்ளுங்கள். துடைதாளை உடனடியாகக் குப்பையில் சேருங்கள்.
ஏன்? திவலைகள் கிருமியைப் பரவச் செய்கின்றன. நல்ல மூச்சுத் தூய்மையைக் கடைப்பிடிப்பதன் மூலம் தடிமன் ஃப்ளூ கொவிட்-19 போன்ற நோய்க்கிருமிகளிலிருந்து உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பாதுகாக்கின்றீர்கள்.
5. உங்களுக்குக் காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டால் விரைவில் மருத்துவக் கவனிப்பு நாடுங்கள்.
நலமில்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். காய்ச்சல் இருமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் மருத்துவக் கவனிப்பு நாடுங்கள். முன்கூட்டி அழையுங்கள். உள்ளூர் மருத்துவ அதிகாரி பிறப்பிக்கும் கட்டளைகளின் படி நடந்து கொள்ளுங்கள்.
ஏன்? உங்கள் பகுதியில் உள்ள நிலைமை பற்றிய புத்தம்புதுத் தகவல் தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடம் இருக்கும். முன்கூட்டியே அழைத்துச் சொல்வது உங்கள் நலவாழ்வுப் பேணுகையாளர் விரைந்து உங்களைச் சரியான நலவாழ்வு வசதியிடத்துக்குப் போகச் சொல்வதற்கு உதவும். மேலும் இது உங்களைப் பாதுகாத்துக் கிருமிகளும் பிற கிருமித் தொற்றுகளும் பரவாமல் தடுக்க உதவும்.
தொற்றுநோயின் எதிர்காலப் போக்கு:
நோய்க் கட்டுப்பாட்டுக்கும் தடுப்புக்குமான மையங்களைச் சேர்ந்த (cdc) முதுநிலையாளர் ஒருவர் இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க ஊடகங்களிடம் கூறிய செய்தி: 'இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ ஒரு கட்டத்தில் அமெரிக்காவில் பலரும் இந்த நோய்க்கிருமிக்கு ஆளாவார்கள்.'
இது வரை உலக அளவில் மிகப் பெரும்பாலான நோய்த்தாக்கு நேர்வுகள் மிதமாகவே இருந்துள்ளன. ஆனால் கொவிட்-19 நோயாளர் இறப்பு வீதம் 1 விழுக்காடு என்றால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மட்டும் பத்தாயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் கூடும் என்று பொருள்.
இந்தக் கணக்கு விவரங்களைச் சற்றே சரியாகப் பொருத்திப் பார்க்க: குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் வரும் இன்ஃப்ளுயென்சா நோய்க்கிருமியின் நோயாளர் இறப்பு வீதம் 0.1%. ஒவ்வோராண்டும் உலகெங்கும் அதனால் 600000 (ஆறு இலட்சம் பேர்) உயிரிழப்பதாக மதிப்பீடு செய்யப்ப்டுகிறது. இதைப் போல் கொவிட்-19 பத்து மடங்கு உயிர்பறிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதனை உறுதி செய்ய இப்போதைய நிலையில் போதிய தரவுகள் இல்லை.
நடப்பு நிலவரத்தில் தொற்று நோயியல் வல்லுநர்கள் பெரிதும் அச்சப்படுவது என்னவென்றால் திடீரென்று நோய் வெடித்துப் பரவினால் மேலும் பலரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்கும். பல நாடுகளில் நலவாழ்வு அமைப்புகளால் அதற்கு முகங்கொடுக்க முடியாமற்போகும் என்பதே. அப்படிப்பட்ட நிலைமையில் மேலும் பலர் அவர்களை உயிரோடு வைத்துக் கொள்ள மருத்துவமனைப் படுக்கைகள் அல்லது உயிர்வளியூட்டிகள் இல்லாமையால் உயிரிழப்பார்கள்.
கல்விக் கூடங்களை மூடுதல் பெருந்திரள் கூடுகைகளைக் கைவிடுதல் வீட்டிலிருந்தபடி பணிசெய்தல் தானே தனித்தொதுங்கல் கூட்டங்களைத் தவிர்த்தல் போன்ற காப்பு வழிமுறைகளைக் கொண்டு இவ்வாறான பேரிடர்ச் சூழலைத் தவிர்க்க முடியும் என இந்த வல்லுநர்கள் கருதுகின்றார்கள்.
நோய்ப்படும் நேர்வுகள் பெரிய அளவில் உயர்வதைத் தடுப்பதற்கான இந்த உத்தியைத் தொற்று நோயியல் வல்லுநர்கள் வரைபடத்தின் 'வளைகோட்டைத் தட்டையாக்குதல்' என்றழைக்கிறார்கள். வளைகோட்டைத் தட்டையாக்குதல் என்பதன் பொருள்: இப்போது செயலாக்கப்படும் சமூகத் தொலைவாக்க வழிமுறைகள் அனைத்தும் நலிவுறுதலைத் தடுப்பதற்கானவை என்பதை விடவும் மக்கள் நோயுறும் வேகத்தை மட்டுப்படுத்துவதற்கானவையே.
மொத்த நோய்ப்படல் நேர்வுகளைக் குறைக்கா விட்டாலும் கூட தொற்று நோயின் வீதத்தை மட்டுப்படுத்துவது அதிமுக்கியமானதாய் அமையக் கூடும்.' என்கிறார் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரியலராய் இருக்கும் ஒருவர்.
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமூக நலம், நலன்பேணல், கல்வி அமைச்சு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |