Home » » கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும், தற்போது மிகப் பெரிய ஆபத்தாக மாறியிருக்கும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு ஒன்றிணைந்திருக்கின்றனர்.  
அந்தவகையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படும் நோயாளிகளை பரிசோதிக்க உதவும் மருத்துவ உபகரணம் ஒன்றினை (Video Laryngoscopes) கொள்வனவு செய்வதற்கான நிதி உதவியினை வழங்கியிருக்கின்றனர். 
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நிதி உதவி வழங்கப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன ThePapare.com இடம் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். 
”வைத்திய அதிகாரிகள் குறிப்பிட்ட இந்த வைத்திய உபகரணத்தினை வாங்குவதற்கான நிதி உதவியினை எதிர்பார்க்கின்றார்கள் என நாம் கேள்விப்பட்ட உடனேயே, எமது முழு அணியும் இதற்காகப் பங்களிப்புச் செய்தது. நாம் எம்மால் முடிந்தவரையில், இந்த வைரஸிற்கு எதிராக போராட முயற்சிக்கின்றோம். தற்போது, வைத்தியர்களுக்கு தேவையாக இருக்கும் குறித்த உபகரணம் இரண்டு நாட்களில், வந்து சேரும்.”

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் கொள்வனவு செய்ய உதவியிருக்கும் மருத்துவ உபகரணம், கொரோனா தொற்றுக்குள்ளாகிய நோயாளிகளின் சுவாசத் தொகுதியுடன் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பரிசோதனைகளை செய்ய உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், இந்த உபகரணம் வந்து சேர்ந்த பின்னர் அது தேசிய வைத்தியசாலையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது. 
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையும் (SLC) கொரோனா வைரஸிற்கு எதிராக போராட ரூபா 25 மில்லியனை நிதி உதவியாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |