Home » » தூக்குத் தண்டனை கைதியான இராணுவ அலுவலகருக்கு பொது மன்னிப்பு – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அதிர்ச்சி – வருத்தம்

தூக்குத் தண்டனை கைதியான இராணுவ அலுவலகருக்கு பொது மன்னிப்பு – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அதிர்ச்சி – வருத்தம்


இலங்கையில் தமிழர்கள் எட்டுப் பேரைப் படுகொலை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கவலை வெளியிட்டுள்ளார்.
2000 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் தென்மராட்சி மிருசுவிலில் எட்டு பொதுமக்களை படுகொலை செய்த குற்றத்துக்கு முன்னாள் இராணுவ ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு 2015 ஆம் ஆண்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கான தண்டனை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயர் நீதிமன்றினால் உறுதிப்படுத்தப்பட்டது.

இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பொதுமன்னிப்பில் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

மிருசுவில் படுகொலைக்காக தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை வழங்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் குழப்பமைடைந்துள்ளார் என அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


பொதுமன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவர்களிற்கு செய்யப்பட்ட அவமரியாதை என குறிப்பிட்டுள்ள மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர், போர்க்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றம், ஏனைய பெரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு அர்த்தபூர்வமான பொறுப்புக்கூறலை வழங்குவதற்கு இலங்கை தவறிவிட்டது என்பதற்கான மற்றுமொரு உதாரணம் இதுவெனவும் கூறியுள்ளார்.


இவ்வாறான மீறல்கள் மற்றும் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு தீர்விற்கான உரிமையுள்ளது. இதில் நீதி மற்றும் இழப்பீட்டுக்கான சமத்துவமும் வாய்ப்பும் அடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குற்றவாளிகள் இழைத்த குற்றங்களிற்காக சமாந்திரமான தண்டனைகள் அவசியம் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |