Home » » முஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் : ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியது ஸ்ரீலங்கா மீஸான் பௌண்டசன்

முஸ்லிம் ஜனாஸா எரிப்பு விவகாரம் : ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பியது ஸ்ரீலங்கா மீஸான் பௌண்டசன்

நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா அமைப்பு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அம்மகஜரில்,

அதிமேதகு கோத்தபய ராஜபக்சே,
ஜனாதிபதி, 
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு. 

நாட்டின் மீது அக்கறை கொண்ட அரசாங்கம் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா என்பது இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும். இந்த நிலையில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கூறப்படுகின்ற முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா இன்று அதிகாலை எரிக்கப்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய கிழக்கு நாடுகளில் கொரானா தொற்றுக்காரணமாக மரணித்தவர்களின் ஜனாஸா, தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மட்டுமின்றி முஸ்லிம் நாடுகளில் பலவற்றிலும் இவ்வாறான இறப்புகள் சமீபத்திய நாட்களில் அதிகமாக சம்பவித்து வருகிறது.

அந்த ஜனாஸாக்கள் இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு தொழுகையின் பின்னர் ஆழமான குழிகளில் நல்லடக்கம் செய்யப்படும் நிலை இருக்கின்ற போதும் எமது நாடான இங்கு மட்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் மட்டுமன்றி இஸ்லாமிய சடங்குகள் சம்பிரதாயங்கள் பற்றிய அறிவுள்ள ஏணைய இன மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இலங்கை அரசாங்க குடியுரிமை சட்டத்தின் படி ஒரு பிரஜைக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை கூட மறுக்கின்ற இந்த கொடூரமான செயலானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்த ஒரு செயலாகவே கருதவேண்டி உள்ளது. உலகை உலுக்கி கொண்டிருக்கும் கொரானா வைரஸின் தொற்றுக்குள்ளாகும் முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டியது காலத்தின் அவசியம் ஆகும். 

நம்நாட்டில் நடந்து முடிந்த இந்த விடயம் முஸ்லிம் மக்களின் மனங்களில் பெரும் வருத்தத்தையும் கண்ணீர் சிந்தும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. எனினும் யாராக இருந்தாலும் இஸ்லாமிய மார்க்க கோட்பாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட அனுமதிக்க முடியாது. 

இவ்வாறான காட்டுமிராண்டித்தன செயல்கள் உடன் களைந்தெறியும் வழிமுறைகளை ஜனாதிபதியான நீங்கள் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமானதாகும். 

இதேவேளை, இவ்வாறான நிலை தொடருமானால் தொற்று ஏற்பட்டு தாம் மரணித்தால் தனது ஜனாஸா எரியூட்டப்பட்டுவிடும் என பயந்து கொரானா தொற்றுக்குள்ளாகும் மக்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் அபாய நிலை எமது நாட்டில் ஏற்படலாம். என்பதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும். 

செயலாளர், 
அல்- மீஸான் பௌண்டசன், 
ஸ்ரீலங்கா
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |