ஊழலில் ஈடுபட்டவர்கள் பழிவாங்கும் நோக்குடன் வதந்திகளைப் பரப்பினர் என தனிமைப்படுத்தலில் இருந்து மீண்ட முன்னாள் அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான மா.உதயகுமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளியில் கூறியதாவது...
என்னுடைய நண்பர் ஒருவர் என்னை சந்தித்தபோது அவருடன் நெருக்கமாக பழகினேன் என்ற அடிப்படையிலே கடந்த 15.03.2020 முதல் என்னை நான் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருந்தேன். அதேவேளையில், நான் சந்தித்த 40க்கு மேற்பட்ட குடும்பங்கள் குறித்த தினத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார திணைக்களத்தினால் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
அந்த அடிப்படையிலே எங்களுடைய சுய தனிமைப்படுத்தல் காலப்பகுதி 29.02.2020 அன்று முடிவுற்றது. அதில் எங்களுக்கு எந்தவொரு நோய் தொற்றும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், அதற்கான கடிதங்களும் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த காலகட்டத்தில் எங்களுக்கு உதவிகளை வழங்கிய சுகாதார அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்,. அத்துடன், எங்களுக்காக பிரார்த்தனை செய்தவர்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியவர்கள் அனைவருக்கும் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன்.
இப்படியான துன்பியல் காலத்தில் சில மனிதத்தன்மை அற்றவர்கள் தமது குறுகிய அரசியல் லாபம் கருதி அல்லது கடந்த காலங்களிலே ஊழல், லஞ்சம், காணி அபகரிப்பு போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டபோது என்னை பழிவாங்கும் நோக்கத்துடன் பொதுமக்களிடையே பொய்யான வதந்திகளை பரப்பி பீதியடைய செய்தமையை அவதானித்திருந்தோம்.
அவ்வாறானவர்கள் ஒரு மனிதனுடைய துயரத்திலே சுகம் காண முடியுமாக இருந்தால், அவனை சாதாரண பகுத்தறிவு உள்ள மனிதனாக கருதிக்கொள்ள முடியாது என்ற அடிப்படையிலே அவர்களுடைய பொய் முகங்களை எங்களுடைய பொதுமக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்ததுடன், இந்த துன்பியல் காலத்தில் அனைவரும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
0 Comments