Home » » கனவுகளை களைந்து நினைவில் வாழ புத்தி கூர்மை அவசியம் தமிழா !!

கனவுகளை களைந்து நினைவில் வாழ புத்தி கூர்மை அவசியம் தமிழா !!


(தமிழா- தமிழ் மொழி பேசுவோர்.)

நூருல் ஹுதா உமர்
ஆசிய நாடுகளில் முதன் முதலாக ஆண் பெண் என இருபாலாருக்கும் வாக்குரிமையை வழங்கிய நாடு இலங்கை. ஆசியாவில் முதன் முதலாக வானொலி ஒலிபரப்பை ஆரம்பித்த நாடு. உலகின் முதலாவது பெண் பிரதமரை தெரிவுசெய்து உலகுக்கு பாலின சமநிலையயை காட்டிய நாடு. உலகிலேயே முதன் முதலாக வனவிலங்கு சரணாலயத்தை அமைத்த நாடு. உலகுக்கு உயர்தர தேயிலை மற்றும் உயர்தரமான வாசனைகொண்ட கறுவாவை ஏற்றுமதி செய்த நாடு என பட்டியல் இடும் அளவுக்கு சிறப்புகள் நிறைந்தது எமது தேசம்.
பல்வேறு சிறப்பு பெருமைகள் கொண்ட இந்துசமுத்திரத்தின் முத்துக்கு... மரகதத்தீவுக்கு... புராதன பாரசீக வணிகர்கள் விளித்த செரண்டிப்புக்கு.. லத்தீன் மொழியூடாக ஐரோப்பியர்களால் அடையாளம் காணப்பட்ட சீலான் செய்லான் சிலோன் ஆகிய விளிப்புகள் கொண்ட அந்த அழகிய தீவுக்கு (பெப் 4) சுதந்திர தினம்.
பொதுவாகவே ஒரு நாட்டின் சுதந்திரதினம் அதன் ஒட்டுமொத்தக் குடி மக்களுக்கும் எவ்வளவு சிறப்பு. அந்த வகையில் இலங்கைத்தீவின் குடிமக்கள் அனைவருக்கும் இது உவப்புக்குரிய நாளாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான் மரபு.
ஆனால் கடந்த 72 வருடங்களாக ஒவ்வொரு முறையும் பெப்ரவரி 4 என்ற இந்த அடையாளம் வரும்போது அதே தீவில் வாழும் இன்னொரு தேசிய இனத்திற்கு மட்டும் இந்தநாள் உவப்பான நாளாக இருந்ததேயில்லை என்பது வரலாறு.
72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வாயிலில் கட்டப்பட்டிருந்த கறுப்புகொடிகளும் பதாகைகளும் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளால் அவசரஅவசரமாக அகற்றப்பட்டிருந்தாலும் கூட அன்றும் இன்றும் இந்த கரிநாள் கருத்தியல் தொடர்ந்தும் இருக்கத்தான் செய்கிறது. சர்வதேசத்தின் கண்ணில் படுமளவுக்கு இருக்கவேண்டியதாக அதன் தலையெழுத்து நிர்மாணிக்கப்பட்டு புதிய கதைகள் சோடிக்கப்பட்டு ஒவ்வொருவருடமும் இது தொடர்கதையாகிறது.
2020 ஆம் ஆண்டு 72வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் வாதிகள் அறிந்திருக்கவே சுதந்திர தினத்தை கரிநாளாக கடைப்பிடிக்கும் படி கோரிக்கைவிடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இந்த முக்கியத்துவமிக்க நாளில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். தமிழ் அரசியல் வாதிகளும் தமது பங்கில் தேசிய விழாவை புறக்கணித்திருந்தனர்.
மறுபுறத்தே அழகிய தீவில் அதிகளவு குடிப்பரம்பலைக்கொண்ட சிங்கள மக்களுக்கு அன்று போலவே இன்றும் இந்த தினம் குறித்து பூரிப்பு இருக்கத்தான் செய்கிறது. 71 ஆண்டுகளுக்கு முன்னர் சுதந்திர இலங்கை சார்பாக சிறிலங்காவின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா தனது உரையை அன்றைய இலங்கை வானொலியில வழங்கியிருந்தார்.இதனைக்கேட்டு அன்று பூரித்த சிங்கள மஹாஜனதாவுக்கும் இன்று சிறிலங்காவின் சுதந்திர சதுக்கத்தில் சிறிலங்காவின் முதன்மைத் தலைவரான கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய சுதந்திரதின உரையை கேட்ட சிங்கள மஹா ஜனதா மனங்களிலும் ஒரு பூரிப்பு இருந்திருக்கத்தான் கூடும். இவ்வாறான பூரிப்பின் பின்னணியில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வழமையான அணிவகுப்பு மரியாதை, குதூகலங்களுடன் 72ஆவது சுதந்திரதினம் கடந்தது.
தனித்துவ சுதந்திரதின நிகழ்வுகளால் கொழும்பின் இயல்புநிலை அதிகம் பாதிப்படையாத வகையில் நகர்த்தியதையும் அவதானிக்க முடிந்தது. மாணவர்கள் வரிசைகட்டி தேசியகீதத்தை பாடினாலும் எதிர்பார்க்கப்பட்டதைப்போல தேசிய நிகழ்வில் தமிழ் தேசிய கீதத்துக்கு இடமளிக்கப்படவில்லை என்கின்ற வாதம் இப்போது தமிழீழ வாதத்தை விட 02 மீட்டர் பெரிதாகவே இருக்கிறது.
தமது இன மக்களின் மீது அதீத கரிசனை கொண்ட இருவரின் கருத்து தேசிய கீத விவகாரத்தில் சரி நேர் எதிராக பயணித்தாலும் ஓரிடத்தில் ஒரு புள்ளியில் சந்தித்து மீண்டும் பிரிகிறது. அக்கருத்துக்களாவன...
தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முன்னாள் மந்திரி தனது பங்குக்கு "தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான் ஜனாதிபதியாக செயற்படுவேன்" என்றும் கூறுகிறார்.அப்புறம்,
தேசிய தினத்தில், நாம் கொண்டு வந்த தமிழில் தேசிய கீதம் பாடும் வழமையை, தனக்கு வாக்களித்த சிங்கள மக்களை மட்டும் மனதில் கொண்டு, தடையும் செய்கிறார்.தடை செய்யுங்கள், "மிஸ்டர் பிரசிடென்ட்" ! அப்புறம் ஏன் "எல்லோருக்கும் ஜனாதிபதி" என்ற "பில்ட்-அப்"..?
முரண்பாடுகளின் பெயர்தான் கோதாபய! இவர் பக்கத்தில் இருக்கும் "செந்தமிழ்" அமைச்சர்கள் இவரின் இந்த முரண்பாட்டை இவருக்கு விளக்கி கூற மாட்டார்களா? என கொந்தளிக்கிறார்.
தேசிய சுதந்திர தின நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. என தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் கொந்தளிக்க அதற்க்கு சமூக வலைத்தள போராளிகள் பக்கவாத்தியம் வாசிக்க இந்த பஜனை சீரும் சிறப்புமாக இப்போது பாடப்படுகிறது. கடந்த ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரம் என்ற முறையில் மனோ கணேசன், அமைச்சரவை உபகுழு மூலம் முன்னெடுத்திருந்தார். 2016ம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடும் வழமை, இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை என மனோ கணேசன் எம்பி தமது கருத்தை பதிவு செய்ய விவகாரம் எல்லைக்கோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. சின்ன ஒரு புள்ளி கிடைத்தால் அதை வைத்து மாபெரும் கோலமே போடும் மனோவுக்கு "தோட்டாக்கட்டான்" சமாச்சாரத்துடன் இப்போது தேசிய கீத சர்ச்சையும் எதிர்வரும் தேர்தல் வெற்றிக்கான கேடயமாக கிடைத்துள்ளது எனலாம்.
இவைகள் எல்லாம் இப்படி இருக்க கோத்தாவை அரியாசனம் ஏற்ற பாடுபட்டு கடைசி நேரத்தில் நோய்வாய்ப்படும் அளவுக்கு தன்னை அர்ப்பணித்த குதிரையின் தலைவர் வழமை போல தனது மண்ணில் மிக பிரகாசமாக சுதந்திர தினத்தை கொண்டாடினார். புத்திரன் தலைமை தாங்கிய மேடையில் கீதம் தொடர்பில் பேசும் போது,
இலங்கையில் இரண்டுமொழிகளிலும் தேசியகீதம் பாடுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் தமிழிலோ சிங்களத்திலோ விரும்பிய மொழியில் பாடமுடியும். அதில் நாங்கள் பிரிவினைப்பட எந்தவித தேவையும் இல்லை. இதோ இந்த சுதந்திர நிகழ்விலும் பெரும்பாண்மை இனத்தின் சிங்கள மொழியில்தான் தேசியகீதம் பாடப்பட்டது. இந்த நாட்டின் சிங்கள தமிழ் மக்கள் எல்லோரும் இணைந்து ஒரு தேசிய கீதத்தினை உருவாக்க முடியும். நமோ நமோ மாதா என்ற இடத்தில் நமோ தாயே என்று சேர்த்து ஒரு தேசியகீதமாக பாடி பிரிவினைகளை களைந்து அனைத்து இனங்களும் ஒன்றாய் பயணிப்பது பற்றி நாங்கள் யோசிக்க முடியும்.
74 வீத பெரும்பாண்மையின மக்கள் 26வீதமான சிறுபாண்மையினரை கருத்தில்கொண்டு தேசிய கீதத்தில், தேசிய கொடியில் அவர்களுக்கான உரிமைகளை வழங்குவார்களேயானால், அதே வழியில் ஏனைய உரிமைகள் தொடர்பில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இலகுவாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அது தொடர்பில் நாங்கள் நாட்டின் தலைவர்களோடு கலந்துரையாடி இருக்கிறோம்.என்றார்.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா சொல்வது வாஸ்தவம் தான். இருந்தாலும் ஒரே நாடு, ஒரே தேசம், பல இனம், பல மொழி என பல்வேறு கோப்பையில் சூப் காச்சும் இனவாதிகளுக்கு இது சரியாக படுமா என்பதுதான் இங்கு பிரச்சினை.
ஒரே நாட்டில் இரு கீதம் பிரச்சனையாக மாற்றப்படுகின்றது என்றால் உடனடியாக அரசு ஒரே முடிவுக்கு வரவேண்டிய காலம் நெருங்கியிருக்கிறது என்பதுதான் சுருக்கம். அசைக்கமுடியாத பலவற்றை அசைத்தும், முடிக்க முடியாத பலவற்றை முடித்தும் பழக்கப்பட்டுப்போன ராஜபக்ஸ ப்ரதர்ஸ்க்கு இந்த பிரச்சினை இப்போதைக்கு அவ்வளவு பெரிய தலையிடி இல்லைதான். இருந்தாலும் கடந்தமுறை விட்ட அசட்டுத்தனமான தவறை இம்முறை அவர்கள் விட தயாராக இல்லை என்பதுதான் எதார்த்தம். இருபது வருடங்கள் இந்த ஆட்சி நீடிக்கும் என கணிப்புக்கள் இருக்க இதனை சரியாக கையாள அவர்கள் திட்டம் வகுப்பார்கள் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.
மொழியால் விதி செய்து மீண்டும் ஆட்சிக்கு சதிசெய்து கதிரை பிடிப்போர் கனவு களையும் என்பது திண்ணம்.
உசாத்துணை : . இணையம்,பத்திரிக்கை
  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |