நூருல் ஹுதா உமர்.
இனபேதம் , பிரதேசவாதம் தவிர்த்து ஒரு குறுகிய தூரத்திற்குள் பிரதேச செயலகங்களுக்கான போராட்டங்கள் நடைபெறும் தற்காலத்தில், மூதூரில் இருந்து சுமார் 12 கிலோ மீற்றருக்கு அப்பால் வாழும் தோப்பூர் தமிழ் பேசும் மக்கள் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், அவர்களின் நிருவாக தேவைகளுக்காக அந்த மக்களுக்கு பிரதேச செயலகம் ஒன்றை உருவாக்குவதே ஒரு மனிதாபிமானமான ஏற்பாடாகும் என தேசிய காங்கிரசின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.
மூதூர் , தோப்பூர் பிரதேச மக்களின் நீண்டநாள் கனவை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் அவர்களிடம் விடுக்கப்பட கோரிக்கை நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக தாமதமானாலும், பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய தேசிய காங்கிறஸின் தலைவரான அப்போதைய அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களினால் தோப்பூர் உப பிரதேச செயலகம் 27/01/2007 ல் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும், அப்பணியை ஆரம்பித்து வைத்த அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் கையினாலேயே அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதுவே இறை நியதியாகவும் இருக்கின்றது என்றும்
கூறிய தோப்பூர் தமிழ் பேசும் மக்கள் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என்று விரும்பி தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் டாக்டர் எம்.வை.எஸ்.எம்.ஷியா அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய , அப்பணியை தொடர வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டு நேற்று 11/02/2020 ல் தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருடன் வந்த தோப்பூர் மக்கள் பிரதிநிதிகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்த போது , கடந்த கால வரலாறுகள் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
அவைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் அம்மக்களுக்கான நிருவாக தேவையை பூர்த்தி செய்து , தனியான அரச வளங்களை பெற்று , அப்பிரதேசம் மேலும் அபிவிருத்தி அடைய நிரந்தர பிரதேச செயலகமாக அதனை தரம் உயர்த்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
0 Comments