Home » » ஸ்ரீலங்காவிற்குள்ளும் கொரோனா! அபாய எச்சரிக்கை விடுத்தது சுகாதாரப் பிரிவு

ஸ்ரீலங்காவிற்குள்ளும் கொரோனா! அபாய எச்சரிக்கை விடுத்தது சுகாதாரப் பிரிவு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவக்கூடிய அபாயம் அதிகமாக நிலவுவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் இன்று காலை வரை, சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென்கொரியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தற்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய 20,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தென் கொரியாவில் வசிக்கின்றனர்.
தென்கொரியாவில் இருந்து வருகை தரும் பயணிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது, தென்கொரியாவிலிருந்து வரும் பயணிகள் 14 நாட்களுக்கு அவதானிக்கப்படுவார்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.
இதேநேரம், கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தென்கொரியாவின் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைமை அதிகாரி செனரத் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |