Home » » கல்முனையில் இயங்கி வந்த புகையிரத ஆசன முற்பதிவு நிலையத்தை, மீண்டும் திறந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை

கல்முனையில் இயங்கி வந்த புகையிரத ஆசன முற்பதிவு நிலையத்தை, மீண்டும் திறந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை

( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனையில் இயங்கி வந்த  புகையிரத  ஆசன முற்பதிவு நிலையத்தை, மீண்டும் திறந்து செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

35 வருடங்களுக்கு முன்னர், மட்டக்களப்பு புகையிரத  நிலையத்தின் ஆசன முன் பதிவு நிலையமொன்று, கல்முனையில் இயங்கி வந்தது.1983ஆம் ஆண்டின் பின்னர் கிழக்கு மாகாணத்தில்  நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக, அம்பாறை மாவட்ட மக்கள் கொழும்புக்குச் செல்வதற்காக, மட்டக்களப்பு புகையிரத நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொண்டனர்.

இதன் காரணமாக, கல்முனையில் இயங்கிய மட்டக்களப்பு  புகையிரத  நிலையத்துக்கான முன் ஆசனப் பதிவு நிலையம் மூடப்பட்டது.

எனினும், தற்போது அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிகமானபொது  மக்களும் அரசாங்க  உத்தியோஸ்தர்களும் கொழும்புக்குச் செல்வதற்கு மட்டக்களப்பிலிருந்து இடம்பெறும் புகையிரத  சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் ரயில் பயணத்துக்காக ஆசனத்தைப் பதிவு செய்து கொள்வதில் அம்பாறைப் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக அரச ஊழியர்கள் பெரும் சிரமத்ததை எதிர்நோக்குகின்றனர்.

ஏனெனில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச புகையிரத  ஆணைச்சீட்டின் மூலம்  புகையிரத  பயணத்துக்கான ஆசனத்தை முன் பதிவு செய்துகொள்ள முடியாமல் உள்ளனர்.

மட்டக்களப்பு  புகையிரத  நிலையத்துக்குச் சென்று முன் ஆசனப்பதிவை மேற்கொள்ளும்போது, நேர விரயமும் வீண் செலவும் ஏற்படுவதோடு, சில சந்தர்ப்பங்களில் ஆசன பதிவு மேற்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே கல்முனையில் இயங்கி வந்த  புகையிரத  ஆசன முன் பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனையில் திறந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, அம் மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |