கொழும்பு மாவட்ட பாடசாலைகளில் மாத்திரம் 2,30,982 மாணவர்கள் ஹெரோயின்,கஞ்ஜா, போதை மாத்திரை, போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவனையில் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த தொகை அதிகமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து பாடசாலைகளையும் போதைப்பொருட்களில் இருந்து விடுவித்து கல்விக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்காக கொண்டு கல்வி அமைச்சும், பொலிஸ் திணைக்களமும், அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையும் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளன.
குறித்த போதைப் பொருள் பாவனையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசி வழங்க வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
போதைப்பொருள் பாவனையினால் பாலியல் ரீதியான பலம் அதிகரிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே போதைப்பொருள் பாவனை தொடர்பாக சரியான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதுடன், மாணவர்களை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில் ஆர்வம் கொண்ட பிரதிநிதிகளை நியமித்து பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பயிற்சி வழங்கவும் ஒரு பாடசாலைக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து குறித்த வேலைத்திட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம் பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு 0777128128 என்ற துரித தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: