உலக நாடுகளின் தலைவர்களும் மருத்துவர்களும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர் என சுகாதாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா, தன் வரலாற்றில் மிகவும் மோசமான நாள்களை அனுபவித்துவருகிறது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும் சூழலில், உலகம் முழுவதும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சீனாவில் மட்டும், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில், கடந்த 2002 மற்றும் 2003-ம் ஆண்டுகளில், அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸின் தாக்கத்தைவிடவும் கொரோனா அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 42,200 பேர் இந்த வைரஸால் பாதிப்படைந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும், 90-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், உபகரணங்கள், மருந்துகள் போன்றவற்றுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய கடுமையான சூழலில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், நகரத்துக்குள் இறங்கி நேற்று களஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
முகமூடி, கிளவுஸ் ஆகியவற்றை அணிந்துகொண்டு, பெய்ஜிங் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசியுள்ளார்.
பின்னர், நகரிலுள்ள சமூகநலக் கூடங்களுக்கும் சென்று மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்துள்ளார்.
கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸுக்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றும் கூறியுள்ளார்.
கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்தே இதைச் சுற்றி வதந்திகளும் பரவிவருகின்றன. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ்,
கொரோனா வைரஸ் தாக்குதலின் கடுமையான சூழலில் நமது ஹீரோக்கள் பணியாற்றிவருகின்றனர்.
வைரஸ் தொடர்பான வதந்திகள் பரவும்போது, மீட்புப்பணியை மேற்கொள்ளக் கடினமாக இருக்கிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதைவிட, கேலிகளை எதிர்த்துப் போராட வேண்டியது அதிகமாக இருக்கிறது என்றார்.
மேலும், வைரஸ் பரவுவதை எதிர்கொள்ள உலக நாடுகளுடன் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
0 Comments