Home » » கம்பெரலியாவும்,ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா?

கம்பெரலியாவும்,ஜே.பி விண்ணப்ப படிவங்களும் கூட்டமைப்பை காப்பாற்றுமா?


- தாயகன் -


கடந்த ஐந்து வருடகாலம் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை போர்குற்றம்,மனித உரிமை மீறல்கள்,பொறுப்புக் கூறலிலிருந்து காப்பாற்றி ஆட்சியை தக்கவைப்பதற்கு உதவியதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பரிசாக வழங்கப்ட்டதுதான் கம்பெரலியாவும்,சமாதான நீதவான் விண்ணப்ப படிவங்களுமாகும்.

இந்த சலுகைகளை பெற்று கூட்டமைப்பினர் திருப்திப்பட்டுக்கொண்டனர்.இவர்களுக்கு வழங்கப்பட்ட கம்பெரலியா  நிதியில் பத்துவீத தரகுப் பணம் பெற்று கூட்டமைப்பு எம்பிக்களால் செய்யபட்ட தரமற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது யாவரும் அறிந்ததே.
 
தமிழ் மக்கள் கடந்த எழுபது வருட காலமாக தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சாத்வீக வழியிலும்,ஆயுதப்போராட்டத்திற்கு ஊடாகவும் போராடிய இனம் பல்லாயிரக்கணக்கான போராளிகளையும் பொதுமக்களையும் இழந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் பாராளுமன்றத்திற்குள்ளும்,வெளியிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு பலமான அரசியல் கட்சி தேவை என்ற தீர்க்கதரிசனத்தின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு தசாப்தங்களை நெருங்கிக்கொண்டு இருக்கும் நேரத்தில் வடக்கு-கிழக்கில் நடைபெற்ற அத்தனை தேர்தல்களிலும் (பாராளுமன்றம்,மாகாணசபை,உள்ளுராட்சி மன்றம்) தமிழ் மக்கள் மிகப்பெரிய பலத்தை கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்தார்கள்.

தமிழரசுக் கட்சி தலைமையிலான இந்தக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான கொள்கை சார்ந்த அரசியல் உரிமையிலும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களின் அன்றாட பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவதற்கு பதிலாக தமது சுயலாப தேர்தல் அரசியலிற்காக ரணில்-மைத்திரி அரசாங்கத்தினுடைய ஆளுங்கட்சி பங்காளிகளாகவும் ,எதிர்கட்சி தலைவர் பதவி,மாவட்ட ஒருங்கிணைப்புத் தலைவர்கள் பதவி,சொகுசு பங்களாக்கள் மற்றும் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல மில்லியன் பணத்திற்காகவும் அத்தோடு அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தல் தாம் வெல்லவேண்டும் என்பதற்காகவும் கம்பெரலியா,சமாதான நீதவான் போன்ற அற்பசொற்ப விடயங்களுக்காக தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டுள்ளார்கள்.

போரினால் பாதிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஆயிரத்து அறுபத்துஐந்து நாட்களை கடந்து வீதியோரங்களில் தமது போராட்டத்தை தொடர்ந்துகொண்டு இருக்கின்றார்கள் இவர்களை ஒரு நாள்கூட கூட்டமைப்பினர் எட்டிப்பார்க்கவில்லை.மாறாக அரசாங்கத்துடனும் புலனாய்வுத்துறையினருடனும் இணைந்து இவர்களது போராட்டத்தையும் அந்த அமைப்புக்களையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ளார்கள்.

காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் OMP வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் கூட்டமைப்பினர் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுடன் கலந்தாலோசிக்காமல் அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் OMP வேண்டும் என்ற சட்ட மூலத்திற்கு கை உயர்த்தி ஆதரவு அளித்திருக்கின்றார்கள். 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்துடன் எந்தவித பேச்சுவாரத்தையிலும் ஈடுபடாமல் ரணில்-மைத்திரியினுடைய அரசாங்கத்திற்கு பல சந்தர்ப்பங்களில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தார்கள் குறிப்பாக ஐநா மனித உரிமை பேரவையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு மூன்று தடவைகள் கூட்டமைப்பின் பாராளுமன்ற,மாகாண சபை உறுப்பினர்களுடைய கையெழுத்துடன் 2021ம் ஆண்டு வரை காலநீடிப்பை பெற்றுக்கொடுத்தார்கள். 

நல்லாட்சி அரசாங்கத்தின் நான்கு வரவு செலவுத்திட்டத்திலும் பாதுகாப்பு செலவீனத்திற்கு யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இரண்டு மடங்காக அதிகரித்த நிதி ஒதுக்கப்படும்போது ஏன் என்று கேள்வி கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்தார்கள். 

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளா இருந்து கொண்டு அரசைக் காப்பாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கைதிகளின் விடுதலை காணாமல் ஆக்கபட்டவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? உட்பட காணி விடுவிப்பு போன்ற எந்த நிபந்தனையையும் இன்றி அரசுக்கு முண்டு கொடுத்தார்கள்.தற்போது இரண்டு மாதங்களாக கோத்தபாய ராஜபக்ஸவை சந்தித்து கம்பெரலியாவின் மிகுதிப் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றார்கள்.

பாதுகாப்புத் தரப்பால் வடக்கு-கிழக்கில் முப்பது வருடகாலமாக யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள்,ஊனமுற்ற போராளிகள்-பொதுமக்கள்,யுத்த விதவைகள் தாய்தந்தையை இழந்த பிள்ளைகள்,தமிழ் மக்களுக்கு சொந்தமான பல்லாயிரம் பில்லியன் சொத்தழிவுகள் ஆகியவற்றிற்கான நஸ்ட ஈடுகளை பெற்றுக்கொடுப்பது பற்றியோ அல்லது தமிழ் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய அடிப்படை பிரச்சினைகளான வீட்டுத்திட்டம்,பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம்,வேலைவாய்ப்பு கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் போன்ற எதிலும் கவனம் செலுத்தாமல் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை சர்வதேச ரீதியிலும் இலங்கைக்குள்ளும் பாதுகாப்பதில் அதி கூடிய கவனம் செலுத்தினார்கள்.

பல தேர்தல்களில் கூட்டமைப்பை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை நிர்க்கதியற்ற நிலைமைக்கு தள்ளியது மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் எதிரும் புதிருமாக இருந்தவர்களை எந்த நோக்கத்திற்காக கூட்டமைப்பை உருவாக்கினாரோ அந்த நோக்கத்தை சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு கடந்த இரண்டு தசாப்பதங்களாக சரியான சந்தர்ப்பங்களில் தவாறன முடிவுகளை எடுத்து இராஜதந்திர ரீதியாக மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.

இவ்வாறன மக்கள் விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டமையால் கூட்டமைப்பானது தமிழ் மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளாகி கூட்டமைபிற்குள்ளும்இவெளியிலும் பதவி சண்டையால் சிதைந்து சின்னாபின்னப்பட்டுப்போய் இருக்கின்றது. 

கடந்த எழுபது வருடகாலமாக தமிழ் மக்களை காலத்திற்குகாலம் ஏமாற்றிய தமிழரசுக் கட்சியினர் ஆளுங்கட்சியுடன் கூடிக் குலாவி தமது பதவிகளுக்காகவும் சந்தர்ப்பவாத அரசியலிற்காகவும் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி இவர்களின் இராஜதந்திரம் அற்ற நடவடிக்கைகளால் இறுதியாக முள்ளிவாய்க்காலில் மிகப்பெரும் மனித பேரவலம் வரை கொண்டு சென்றார்கள்.

போரால் பாதிக்கபட்ட மக்கள் தன்னம்தனியே வீதியோரங்களில் தமது உறவுகளிற்காக போராடிக்கொண்டு இருக்கும் போது இராஜதந்திர ரீதியில் தோற்றுப்போன கட்சியும் அதன் தலைவர்களும் தமது கட்சியின் எழுவதாவது வருட நிறைவையொட்டி கேக்வெட்டி மகிழ்ச்சி வெள்ளத்தில் கொண்டாடிவருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு பிரபாகரன் அவர்கள் கம்பெரலியாவிற்காகவும் சமாதான நீதவான் விண்ணப்பபடிவங்களுக்காகவும் இந்த கூட்டமைப்பை உருவாக்கவில்லை என்று தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் என்பதுடன் தமிழ் மக்கள் உரிய நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதற்கு காத்திருக்கின்றார்கள் என்பதுமட்டும் தான் நிதர்சனமான உண்மை. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |