Home » » மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல்!

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல்!

ஐ.பி.சி தமிழின் பிராந்திய செய்தியாளர் வடிவேல் சக்திவேல் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்களது புகைப்படங்களுடன் துண்டுப் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமக்கு அச்சுறுத்தல் விடுப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களை இணைத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று மாதங்கள் கூட கடக்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர்களது புகைப்படங்களுடன் துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாதவர்களால் வெளியிடப்பட்ட இந்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டக்களப்பு மாவட்ட ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் போடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட ஊடக அமையத்திற்குள் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணி அளவில் ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர்.
அலுவலகத்தை திறந்த போது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை ஊடகவியலாளர்கள் அவதானித்துள்ளனர்.
குறித்த துண்டு பிரசுரத்தில், “எச்சரிக்கை! எச்சரிக்கை! இவர்கள்தான் வெளிநாட்டுப் புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ், இவர்களுக்கு விரைவில் மரண தண்டனை விதிப்போம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் இந்த துண்டு பிரசுரத்தில் ஊடகவியலாளர்களின் ஒளிப்படங்களும் அச்சிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலும், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றிற்கும் இந்த எச்சரிக்கை துண்டுப் பிரசுரம் தொடர்பாக கூட்டாக தெரியப்படுத்தவுள்ளதாகவும் எமது செய்தியாளர் கூறினார்.
இவ்வாறாயினும் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், சிரேஸ்ட ஊடகவியலாளரும், லசந்த விக்ரமதுங்கவின் 11ஆவது நினைவு தினம் இம்மாதம் 09 ஆம் திகதி மாலை 4 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள ஊடகவியலாளர் நினைவு தூபி முன்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளார் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் உள்ளிட்ட மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டார்.
இதன்போது ஈகைச்சுடரேற்றல், மலரஞ்சலி, அஞ்சலி உரை என்பன இடம்பெற்றுள்ளதுடன் அன்னாரின் சிறப்பான ஊடகப்பணியை வடகிழக்கு உட்பட நாட்டிலே உள்ள ஊடகங்கள்,ஊடகவியலாளர்கள், தொடரவேண்டும் என்பதோடு சுதந்திர ஊடகம் இலங்கையில் நசுக்கப்பட்டால் நாட்டின் சுதந்திரம்,மனித உரிமைகள் நசுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |