Home » » ஒப்பந்தங்களை செய்து மரங்களை வெட்டியவர் மக்களை ஏமாற்றியவர் தான் கோடீஸ்வரன்!

ஒப்பந்தங்களை செய்து மரங்களை வெட்டியவர் மக்களை ஏமாற்றியவர் தான் கோடீஸ்வரன்!

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கோடீஸ்வரன் ஒப்பந்தங்கள் செய்வது, மரங்களை வெட்டி விற்பது போன்ற வேலைகளை மாத்திரம் செய்தார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வாழைச்சேனை கல்மடு பிரதேசத்திலுள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கூட்டம் கல்மடு பிள்ளையார் ஆலய முன்றலில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கோடீஸ்வரனுக்கு நாங்கள் அம்பாறை பகுதிக்கு சென்றதன் பிற்பாடு அவருக்கு தற்போது நித்திரை இல்லை. மக்களை ஏமாற்றி திரிந்தவர். இவர் ஒப்பந்தங்கள் செய்வது, மரங்களை வெட்டி விற்பது போன்ற வேலைகளை மாத்திரம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினருக்கான எந்த வேலைகளும் செய்வதில்லை.
நாங்கள் அம்பாறைக்கு சென்று மக்களுக்கு உதவி செய்யும் வேலையில் பயத்தின் காரணமாக தற்போது சத்தம் போட்டுக் கொண்டிருக்கின்றார். ஏனெனில் மக்கள் விரட்டியடிப்பார்கள் என்று தெரியும். வடகிழக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தமிழர்களை கட்டியெழுப்பும் நோக்கில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயற்பட்டு வருகின்றது.
மீனவர் சங்கத்தினை பலப்படுத்தி அதன் மூலம் பல உதவிகளை பெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளது. சமுர்த்தி இல்லாதவர்களுக்கு சமுர்த்தி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அரசியலை திறம்பட பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அதன் மூலம் பலன் எங்களுக்கு கிடைக்கும். அரசியலை பயன்படுத்தாமல் விட்டு ஆதங்கப்படுவதில் எந்த பயனும் இல்லை.
கடந்த கால மைத்திரி, ரணில் அரசாங்கத்தினால் ஐந்து வருடம் எந்தவித பிரயோசனமும் இல்லை. அரசியல்வாதிக்கு கிடைக்கும் வளங்களை எமக்கு கொண்டு வரவேண்டும். ஆனால் அவர்களுக்கு வளத்தினை பெற்றுக் கொள்வதற்கு அனுப்பி வைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. தமிழ் தேசியம் என்ற ஆயுதத்தினை வைத்த போது வாக்களித்து பின்னர் கவனிப்பாரற்று கிடக்கின்றோம்.
தற்போது வழங்கப்படவுள்ள ஒரு இலட்சம் வேலை வாய்ப்பானது சமுர்த்தி பெறும் மக்களுக்கும், சமுர்த்தி பெறுவதற்கு தகுதியானவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் சமுர்த்தியை நிறுத்தி மக்கள் வேலை செய்வதே நோக்கம். இந்த செயற்பாட்டுக்கு அனைவரும் நேர்மையாக செயற்பட வேண்டும்.
சம்பந்தன் ஐயா ஜனாதிபதி தேர்தலில் சஜித்திடம் சில கோரிக்கைகளை வழங்கி இதனை நிறைவேற்றினால் ஆதரவு தருவதாக கூறினார். உங்கள் கோரிக்கையும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் என்று கலைத்து விட்டார். மூன்று நாள் பேசாமல் இருந்த சம்பந்தன் ஐயா காலையில் அன்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறினார். பணம் வாங்கியுள்ளனர். பணம் பெற்றதும் கொள்கையும் இல்லை. எதுவும் இல்லை.
இவர்களை நம்பி கடந்த காலத்தில் மைத்திரிக்கும், தற்போது சஜித்திற்கும் வாக்களித்தீர்கள். மைத்திரிக்கு வாக்களித்து எந்த பிரயோசனமும் இல்லை. இவர் கடமைக்கு ஜனாதிபதியாக இருந்து விட்டு சென்றுள்ளார். தற்போது உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அரசாங்கத்தில் நல்ல காலம் உள்ளது. இந்த அரசாங்கம் பத்து வருடம் நீடிக்கும் என்றார்.
கட்சி உறுப்பினர் ஆர்.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலதிக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி, வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.துரைராஜசிங்கம், கட்சி பிரதிநிதிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |