Home » » கடமைநேரமும் மேலதிகவகுப்பும் தொடர்பான வரையறை! அதிபர்களுக்குரியது.

கடமைநேரமும் மேலதிகவகுப்பும் தொடர்பான வரையறை! அதிபர்களுக்குரியது.

கல்வி அமைச்சின் 2006/26 சுற்றுநிருபம் பாடசாலை நடைபெறும் நேரத்தை வரையறை செய்கிறது. இதன்படி மு.ப. 7.30 - பி.ப. 1.30 பாடசாலை நேரமாகும். அச்சுற்றுநிருபத்தில் 1.3ஆம் பிரிவின் குறிப்பின்படி பிரதேசக் காலநிலைக்கேற்ப பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தை மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் மாற்றிக்கொள்ள முடியும். எனினும் பாடசாலை நடாத்தப்படும் காலம் 6 மணித்தியாலங்களாய் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. எனவே இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆசிரியரும் தனது வசிப்பிடத்திலிருந்து புறப்பட்டு பாடசாலைக் கடமை முடிவடைந்து தனது வசிப்பிடத்திற்குச் சென்றடையும் நேரம் திட்டமிடப்படுகிறது. இதைத்தான் கடமை நேரமாக தா.கோ.xii-9.1 உம் பொ.நி.22/93 உம் காட்டுகின்றன. இதற்குப் புறம்பான நேரம் எதுவும் கடமை நேரமாகக் கணிக்கப்படமாட்டாது.

பாசாலை நேரம் முடிந்தபின் மேலதிக வகுப்புக்களை நடாத்துவதோ அல்லது விடுமுறை நாட்களில் மேலதிக வகுப்புக்களை நடாத்துவதோ அரசாங்கக் கோரிக்கையல்ல.
அந்நேரமும் கடமையோடு தொடர்புபட்ட நேரமுமல்ல என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் இவ்வாறு மேலதிக வகுப்புக்களை பாடசாலை வளவினுள் நடாத்த வேண்டும் என்ற கட்டாயமுமில்லை. அது உங்கள் தனிப்பட்ட விடயம். எந்த இடத்திலும் நடாத்த முடியும். பாடசாலை வளவினுள் நீங்கள் மேலதிக வகுப்பை நடாத்துவதால் அதனைக் கடமை நேரத்தினுள் உள்வாங்க முடியாது. எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் விபத்துக்களுக்கு நட்டஈடு எதிர்பார்க்க முடியாது.

மேலதிக வகுப்பு முடிந்து செல்லும்போது பி.ப. 4.30 மணிக்கு தினவரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டுச் செல்லலாமா??

பாடசாலை நிர்வாகம் உரிய நேரத்தில் ஆரம்பித்து உரிய நேரத்தில் முற்றுப்பெறல் வேண்டும். பாடசாலைக் கட்டிடமும் வளவும் அரசுக்குச் சொந்தமானது. பாடசாலை நேரம் தவிர்ந்த வேளையில் நடைபெறும் எந்த நிகழ்வும் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடனேயே செய்யப்படல் வேண்டும்.
கல்விப் பணிப்பாளரின் முறையான அனுமதி பெறப்பட்டு பாடசாலையில் மேலதிக வகுப்புக்கள் நடாத்துவதாயின் ??
1.தினவரவுப் பதிவேட்டில் பி.ப.4.30 மணிக்கு கையொப்பமிட முடியாது. காரணம் பாடசாலை முடிவடையும் கடமை நேரம் சகல ஆசிரியர்களுக்கும் பொதுவானது. அது வரையறை செய்யப்பட்டுள்ளது. அதற்கப்பால் தினவரவுப் பதிவேட்டைப் பயன்படுத்த முடியாது.
2. அனுமதி பெறப்பட்ட கடிதத்தின் விபரத்துடன் தினமும் அதிபர் சம்பவத்திரட்டுப் பதிவேட்டில் குறிப்பிடுதல் வேண்டும்.
3.உரிய நேரம்வரை அதிபரின் மேற்பார்வை இடம்பெற வேண்டும்.
4. அதிபர் உரிய நேரம்வரை அங்கிருக்காத கட்டத்தில் வெளியாட்கள் மூலம் பாடசாலைச் சொத்துக்களுக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் மேலதிக வகுப்பை நடாத்திய ஆசிரியர் பொறுப்புக் கூறவேண்டும். அவருக்கு பொலிஸ் / நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய கட்டம் வரலாம்.
5.பாடசாலையில் ஆசிரியர்களால் நடாத்தப்படும் மேலதிக வகுப்புக்களுக்கு மாணவர்களிடமிருந்து ஏதாவது பணம் வசூலிக்கப்படுமானால் அதனாலுள்ள விளைவுகளும் பாரதூரமானது.
நன்றி-இ.த.ஆ.ச.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |