Home » » ஜனவரிக்குள் 54,000 பட்டதாரிகளுக்கு அரசதுறை வேலைவாய்ப்பு வழங்கப்படும்

ஜனவரிக்குள் 54,000 பட்டதாரிகளுக்கு அரசதுறை வேலைவாய்ப்பு வழங்கப்படும்

ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலில் முன்னோடி நடவடிக்கை ஆரம்பம்

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் 54ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசதுறை வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலுக்கிணங்க அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடளாவிய சகல கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் அரச வேலை வாய்ப்புக்களில் எத்தகைய அரசியல் பேதங்களும் இருக்க மாட்டாது என்றும் தகைமைகளுக்கேற்ப ஆட் சேர்ப்பு நியதிகளின்படி அவற்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க சேவையின் ஆரம்ப தரத்தில் ஆட்களை இணைத்துக் கொள்வதற்கு க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தோருக்கு அவர்களது தகைமை அடிப்படையில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளதுடன் க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்கும் அரச துறையில் புதிய வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்க முறைமை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்கிணங்க தொழிற்பயிற்சி மற்றும் கல்வித் தகைமை அவசியமற்ற வேலைவாய்ப்புக்களை குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரச சேவையில் கீழ் மட்டத்தில் ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்கு க. பொ. த. சாதரண தரப் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பது அவசியமாகக் கருதப்படுகின்றது. இதனால் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களின் இளைஞர் யுவதிகளுக்கு அரச துறையில் வாய்ப்புகள் கிடைக்காமல் போகின்றன.

இந்நிலையைக் கவனத்தில் கொண்டு அரச துறையின் நியதிகளைப் பாதுகாத்து அவ்வாறானவர்களுக்கும் அரச சேவையில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும்.

கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் பட்டதாரிகள் வேலைவாய்ப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க சிறந்த முறைமையொன்றை முன்னெடுக்கப்பட்டிருந்தது. பட்டதாரிகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஆக்கபூர்வமாகப் பங்களிப்புச் செய்வதற்கு வாய்ப்பாக அந்தத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டிருந்தது என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |