Home » » மட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு

மட்டக்களப்பு மாநகரசபையின் 25ஆவது அமர்வு

காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப செயற்படும் வகையில் சூழலை மாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டி உள்ளது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் 25ஆவது அமர்வு இன்று மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது முதல்வரின் அறிவிப்புகள், நிதிக்குழுவின் சிபாரிசுகள், முதல்வரின் முன்மொழிவுகள், மாதாந்த கணக்குக்கூற்று தொடர்பிலான ஆராய்வுகள், மாநகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

மட்டக்களப்பில் சில தினங்களாக காணப்பட்ட பனிப்பொழிவு காற்று மாசடைந்த நிலையென அறியப்பட்டுள்ளதாகவும் இது இந்தியாவில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய கழிவுகள் காற்றின் ஊடாக மட்டக்களப்பினையும் தாக்கியுள்ளதாகவும் இதன்போது மாநகர முதல்வர் கூறியுள்ளார்.
அதற்கமைய எதிர்காலத்தில் காலநிலைக்கு ஏற்றவாறு சூழலை மாற்றியமைக்கவேண்டிய தேவையிருப்பதாகவும், பலதரப்பட்ட தரப்பினரையும் இணைத்து அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று ஊடாக செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் முதல்வர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்படும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |