Advertisement

Responsive Advertisement

துள்ளும் சஜித், கடிவாளமிட துடிக்கும் ரணில்....?


இலங்கை அரசியலில் பிரேமதாசவின் நாமம் அழிக்க முடியாததொன்று. அந்த நாமத்தின் ஊடுருவலின் ஆழம் தான், இன்று அமைச்சர் சஜித் மக்கள் வாய்களில் ஜனாதிபதி வேட்பாளராக அலசப்படுவதெனலாம். பிரதமர் ரணிலின் ஆழுமையற்ற தலைமைத்துவம் அமைச்சர் சஜித் இந்தளவு தூரம் செல்வதற்கான பிரதான காரணமாகும். இதுவரை காலமும் மௌனமாக தலைமைத்துவத்தை நோக்கி காய் நகர்த்திய சஜித், இன்று பிரதமர் ரணிலோடு அனைவரும் அறியும் விதத்தில் போர் பிரகடனத்தை செய்துள்ளார்.
ரணில் ஒரு இராஜதந்திரி. இதுவரை காலமும் அவர் எப்படி இராஜதந்திரங்களை கையாண்டிருந்தாலும், தனது கட்சிக்குள், இலங்கை மக்களிடையே, தான் ஜனாதிபதி வேட்பாளருக்கு மிகத் தகுதியானவர் என்பதை உறுதி செய்வதில் தவறிழைத்து விட்டார் எனலாம். அதில் அவர் தோல்வி கண்டாலும், தனது தலைமைத்துவத்தை தக்க வைப்பதை நோக்காக கொண்டு காய்களை நகர்த்துவதை அவதானிக்க முடிகிறது. அந்த வகையில் சஜிதை ஜனாதிபதியாக்குவது, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பது, ரணிலின் தலைமைத்துவத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதன் காரணமாக சஜித்தை வேட்பாளராக அறிவிக்க ரணில் ஒரு போதும் விரும்பமாட்டார். இதனை சஜிதும் நன்கே அறிவார்.
கடந்த 52 நாள் ஆட்சிமாற்ற குழப்பத்தின் போது, ரணில் அல்லாமல் வேறு ஒருவரை பிரதமராக நியமித்து பிரச்சினையை இலகுவாக முடிப்போம் என்றதொரு நிலை ஐ.தே.கவினுள் உருவாகியிருந்தது. அப்போது சஜித் முற்றாக புறக்கணிக்கப்பட்டு சபாநாயகர் கருவே முன்னிலை பெற்றிருந்தார். இதனை வைத்து சிந்தித்தால், சஜித் அமைதியாக இருந்தால், யார் ஜனாதிபதி வேட்பாளர் என்பதை ஓரளவு மட்டிட்டுக்கொள்ள முடியும். தனக்கு வேட்பாளர் அந்தஸ்து கிடைக்குமென்ற நம்பிக்கை சிறிதளவாவது சஜிதுக்கு இருந்திருந்தால், அவர் இவ்வாறு மக்களிடையே பிரச்சினையை கொண்டு சென்றிருக்க மாட்டார். இவ்வாறு பகிரங்கமாக செயற்பட்டு கட்சிக்குள் குழப்ப நிலையை ஏற்படுத்துவதன் மூலம் பலரது எதிர்ப்புக்களை சம்பாதிக்க வரும்.
சஜித் சு.கவோடு உடன்படிக்கையொன்றை செய்து சிலவேளை தேர்தலில் குதிக்கலாம். இது ஐ.தே.கவில் ஆசனம் வழங்கப்படாமல் விட்டால், மாற்று யோசனையில் ஒன்றாக குறிப்பிட முடியும். ஜனாதிபதி மைத்திரி செய்தது போன்று சத்தம் போடாமல் அமைதியாக இருந்துவிட்டு அவரால் சு.கவுடன் இணைந்திருக்க முடியும். அவ்வாறு சென்று, தனது வெற்றியை உறுதி செய்கின்றளவு இன்று சு.க பலமிக்கதாக இல்லை என்பதை சஜித் அறியாதவராகவுமிருக்க மாட்டார். அது மாத்திரமன்றி அவர் சு.கவுடன் இணைந்து தேர்தல் கேட்டு வெற்றியீட்டினாலும், முழுமையான அதிகாரத்துடன் ஆட்சிமயைப்பதில் பாரிய சிக்கல்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
ஐ.தே.கவைச் சேர்ந்த பலர் இத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைவர் ரணில் களமிறங்கினால் தோல்வியை சந்திப்பார் என்ற சிந்தனையில் இருப்பதால், மாற்று வேட்பாளர் குறித்து சிந்திக்கின்றனர். இம் முறை ஐ.தே.க தோல்வியை தழுவினால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது மிகக் கடினமானது. ரணிலுக்கென்ன? எதிர்க்கட்சி சுக போகம், ஐ.தே.கவின் தலைவரென்ற பலத்தோடும் இருப்பார். இவ்வாறானவர்கள் சஜிதையே பொருத்தமான வேட்பாளராக கருதுகின்றனர். இது சஜித்துக்கு கிடைத்துள்ள பாரிய பலம். இவ்வாறானதொரு அணி, தன் பின்னால் உள்ள தைரியத்தில் தான், அவர் இத்தனை தூரம் சென்று குதித்து விளையாடுகிறார்.
பிரதமர் ரணில் சஜிதுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை உவர்ந்து வழங்க மாட்டார். அதனை பெற வேண்டுமாக இருந்தால், சஜித், தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரி உயரிய அழுத்தம் வழங்க வேண்டும். அந்த உயரிய அழுத்தத்தை மக்களின் மூலமே பெற்றுக்கொடுக்க முடியும். அதற்கான முயற்சியே இது. இன்று ஐ.தே.கவினுள் சஜிதுக்கு கணிசமான ஆதரவுள்ள போதும், ஐ.தே.கவின் பங்காளி கட்சிகளிடையே சஜிதுக்கான ஆதரவு குறைவு. யாரும் இன்னுமொருவரை பெரியாளாக்க விரும்புவதில்லையல்லவா? வழமை போன்று ரணிலே களமிறங்கினால், இன்னுமொருவர் பெரியாளாக மாட்டாரல்லவா? இன்னொரால் பெரியாளாகாது விட்டால், எதிர்வரும் காலங்களில் அவ்விடத்தை தாங்களும் கைப்பற்ற முடியுமல்லவா? இவ்வாறான சிந்தனை கொண்ட பங்காளி கட்சிகளை வைத்தே பிரதமர் ரணில் சஜிதுக்கு கடிவாளமிட திட்டமிட்டுள்ளதை அவரது பல்வேறு செயற்பாடுகள் துல்லியமாக்குகின்றன.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.

Post a Comment

0 Comments