சஜித் தான் ஜனாதிபதி வேட்பாளர் என்று சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க அது தொடர்பில் தனது சகாக்களோடு பேசிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமான இந்த மக்கள் சந்திப்பில் நாட்டின் பல பாகங்களிலிருந்து பல்லாயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ஜனாதிபதி தேர்தலுக்காக மக்கள் விடுதலை முன்னணி 20 வருடங்களின் பின்னர் வேட்பாளர் ஒருவரை களமிறக்கியுள்ளது.
இன்று பெரும் எண்ணிக்கையான மக்கள் கூட்டம் காலி முகத்திடலில் திரண்டனர். இரண்டு பிரதான கட்சிகளாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்று பெரும் அரசியல் போட்டியில் இறங்கியிருந்தன.
எனினும் மகிந்த தரப்பினர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்று புதிய கட்சியை ஆரம்பித்து மக்கள் சக்தியை வெளிப்படுத்தினர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட மகிந்த தரப்பு தங்கள் பலத்தை நிரூபித்துக்காட்டினர்.
இந்நிலையில் மகிந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தான் போட்டி இருக்கும் என்று இன்று மாலை வரை நம்பிக்கை கொண்டிருக்க முடிந்தது.
ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் கூடிய மக்கள் இன்னொரு செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்கள். மூன்றாவது எதிர்ப்பாளர், போட்டியாளருக்கும் பெரும் ஆதரவு உண்டு என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
காலி முகத்திடலில் கூடிய கூட்டம் அதையே உணர்த்தியிருக்கிறது. இலங்கை மக்கள் மாற்று அணியொன்றின் தேவையை உணர்ந்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் நிகழ்வாக இன்றைய நிகழ்வு மாறியிருக்கிறது.
இதேவேளை, கோத்தபாயவிற்கும் சஜித்திற்கும் சவாலாக அனுரகுமாரவும் மாறுவார் என்பதை இன்றைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் பெரும் சவால்களோடு இருக்கப்போகின்றது என்பதில் ஐயமில்லை.
0 Comments