Home » » மட்டக்களப்பு - கிரான் பகுதியில் வீதிக்கு இறங்கிய உத்தியோகத்தர்கள்

மட்டக்களப்பு - கிரான் பகுதியில் வீதிக்கு இறங்கிய உத்தியோகத்தர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
கிரான் பிரதான சந்தியில் இருந்து செல்லும் பிரதான பாதையினை புனரமைத்து தருமாறுக் கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, குன்றும் குழியுமாக இருக்கும் பாதை சீர்செய்யப்படாமல் இருப்பது ஏன்? சீரான பொது போக்குவரத்து நடைமுறைப்படுத்த ஆவண செய், வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்த முயற்சி செய், மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதான வீதிகளும் புனரமைக்கப்பட்ட நிலையில் புலிபாய்ந்தகல் பாலமும் வீதியும் புறக்கணிக்கப்பட்டது ஏன்? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.


குறித்த வீதியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புனரமைத்து தராவிட்டால் தேர்தல் காலத்தில் வாக்கு கேட்டு வரவேண்டாம் என இதன்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள்,
கிரான் புலியாந்தகல் வீதியால் பயணம் செய்யும் போது பேருந்துகள் தடம் புரண்டால் அதில் பயணிக்கும் பயணிகள் மரணிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. தமிழ், சிங்களம், முஸ்லிம் கூட்டமைப்பு யாராக இருந்தாலும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம்.
கிரான் பக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும் சரி, யார் என்றாலும் சரி எங்கள் பக்கம் வரவேண்டாம். முதலில் கிரான் பிரதான சந்தியில் இருந்து கிரான் பிரதேச செயலகம் வரை செல்லும் பிரதான பாதையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புனரமைத்து தராவிட்டால் தேர்தல் காலத்தில் வாக்கு கேட்டு வரவேண்டாம்.

இவ்வீதியால் பயணித்த அரச உத்தியோகத்தர் மூவரின் வயிற்றில் இருந்த பிள்ளைகள் கூட அழிந்துள்ள நிலைமை ஏற்பட்டிருந்தது. எனவே, உடனடியாக இவ்வீதியை புனரமைத்து விட்டு எங்கள் பக்கம் வாருங்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த பாதையினை புனரமைத்து தருமாறு கோரி கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிரான் பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தில் எழுவான் கரையையும், படுவான் கரையையும் இணைக்கும் பிரதான பாலமாக கிரான் பாலம் காணப்படுவதுடன் கிரான் பாலத்தில் இருந்து படுவான் கரைக்குச் செல்லும் பாதையின் ஊடாக பயணிக்கும் மக்களின் தொகையும் அதிகமாக காணப்படுகின்றது.
இப்படுவான்கரை பிரதேசத்திலே 2500இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன் 11 கிராம சேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றன. இப்பிரதேசத்திலே 5000இற்கு ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களும், 2000இற்கு மேற்பட்ட சேனைப்பயிர்செய்கை நிலங்களும் மற்றும் 10,000இற்கும் மேற்பட்ட கால்நடைகளும் காணப்படுகின்றன.
அத்தோடு 14 பாடசாலைகளும், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், விவசாய அபிவிருத்தி அலுவலகம் போன்ற பொது நிறுவனங்கள் இருந்த போதும் இப்பாதையானது பன்னெடுங்காலமாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களாகிய நாங்களும் விதிவிலக்கல்ல.
வீதி மோசமான நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றமையால் உத்தியோகத்தர்கள் சீரான போக்குவரத்து வசதியினை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றோம். அது மட்டுமல்லாது தற்போது காலை வேளையில் வருகை தரும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மாலை வேளையில் பெரும்பாலும் வருகை தருவதில்லை இதனால் அலுவலக கடமைக்கு வருகின்ற உத்தியோகத்தர்கள் கடும் சிரமத்தின் மத்தியிலேயே வீடுசெல்ல வேண்டியுள்ளது, குறிப்பாக பெண் உத்தயோகத்தர்கள்.
வீதியின் மோசமான நிலை காரணமாக வேறு போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தும் உத்தியோகத்தர்களும் வீதியின் மோசமான நிலையினால் விபத்துக்களுக்குள்ளாகுவதுடன், உடல்ரீதியான உபாதைகளுக்கும் உள்ளாவதுடன் வீதியின் மோசமான நிலை காரணமாக பெண் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிள் பயன்படுத்த முடியாத நிலையும் காணப்படுகின்றது.
இவ்வீதியின் மோசமான நிலையினால் வெள்ளக் காலங்களில் வெள்ள நீரானது வீதியினை மேவி செல்வதனால் படகுச்சேவை இடம்பெறும் காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள், விசேட தேவைகள் உடையோர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறுபட்ட மக்களும் நாங்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வீதியின் தன்மையினை காரணங்காட்டி இடமாற்றத்தினை ஏற்று வருவதற்கு உத்தியோகத்தர்கள் மறுக்கின்றனர் இருந்தபோதும் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து 5 வருடங்களுக்கு மேல் கடமையில் இருக்கும் நாங்கள் இடமாற்றத்தினை கோருகின்ற போது பிரதேச மட்டத்திலும் ஏனையவர்களாலும் பதிலாள் இல்லாமல் விடுவிக்க முடியாது என மறுக்கின்றனர்.
எனவே, இதற்கான உரிய நடவடிக்கையினை பெற்றுத்தருமாறும் தங்களை மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வீதியானது பல்வேறுபட்ட மக்களின் வாழவாதாரத்திற்கு உறுதுணையாக காணப்படுகின்ற இப்பாதையே ஆகும். இருந்தபோதும் பல்வேறு தரப்பினரும் வீதியானது திருத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வாக்குறுதிகளை வழங்குகின்றனர்.
ஆனால், இதுவரை அது நடைபெற்றதாக இல்லை எனவே எமது கஸ்டங்களையும் நாங்கள் அனுபவிக்கும் சிரமங்களையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களில் சீரன போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தருவதற்கு ஆவண செய்வதுடன் கிரான் தொடக்கம் புலிபாயந்தகல் வரையான வீதியினை உடன் போக்குவரத்திற்கு உகந்த வகையில் செப்பனிட்டு தருவதற்கு ஆவண செய்யுமாறு தங்களை பணிவாக வேண்டி நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |