Home » » தமிழினத்தின் இருப்பு கல்வியில் தான் தங்கியுள்ளது – மாநகர முதல்வர்

தமிழினத்தின் இருப்பு கல்வியில் தான் தங்கியுள்ளது – மாநகர முதல்வர்


யுத்தத்தில் பாதிப்புக்குள்ளான மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக புலம்பெயர் உறவுகள் உதவிகளை மேற்கொண்டு வருகின்றமை பாராட்டக் கூடியதாகும். அதேவேளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க கூடிய வகையிலும் முதலீடுகளை செய்ய முன்வரவேண்டும். 

தமிழ் இனத்தின் எதிர்கால இருப்பு எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலேயே தான் தங்கியுள்ளது. அதற்கான சிறந்த அத்திவாரத்தினை இடுவதற்காகத்தான் எல்லோரும் ஆரம்ப கல்வியைக் குறிவைத்து உதவிகளை மேற்கொண்டு வருவதாக மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். 

கல்வி மற்றும் சமுக சேவைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சாதனையாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (14.08.2019) வாகரை வம்மிவட்டுவான் சைவ பண்ணாட்டு நடுவத்தில் இடம்பெற்றது.

வறிய மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியா வாழ் கொடையாளர்களின் நிதி அனுசரணையில் வம்மிவட்டுவான் அறநெறி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன். இக்கிராமத்தில் பல்வேறு சமுக சேவைகளில் ஈடுபட்டுவரும் சாதனையாளர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள். 

சமுக ஆர்வலர்கள் துரைராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

கல்வியால் உயர்ந்தவர்கள் பெரும்பாலும் வறிய நிலையில் இருந்து வந்தவர்களே ஆகவே ஏழையாய் பிறந்தது உங்கள் தவறு அல்ல ஏழையாய் இறப்பது தான் உங்கள் தவறு என்று நினைத்து கொண்டு பிள்ளைகள் அனைவரும் படிக்க வேண்டும். 
இலங்கையின் கல்வி நிலையில், குறிப்பாக பொதுத் தேர்வுகளில் அண்மைக் காலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்னடைவில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டி வந்தன. அதனை மேலும் மெய்ப்பிக்கும் வகையில் கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற  க.பொ.த சாதாரண தரத் தேர்வுப் பெறுபேறுகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.

ஒருகாலத்தில் இலங்கையில் கல்வியில் கொடிகட்டிப் பறந்த வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இன்று அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளன. க.பொ.த சாதாரண தர தேர்வில் இம்முறை – கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் 64.4 சதவீதமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.51 சதவீதமும் திருகோணமலை மாவட்டத்தில் 53.17 சதவீதமும் மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 67.02 சதவீதமும் கிளிநொச்சி மாவட்டத்தில் 54.3 சதவீதமும் மன்னார் மாவட்டத்தில் 69.34 சதவீதமும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60.4 சதவீதமும் வவுனியா மாவட்டத்தில் 68.28 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட ரீதியான தேர்ச்சி வீத அடிப்படையில் 25 மாவட்டங்களிலும் கடைசி இடத்தை திருகோணமலை மாவட்டமும் அதற்கு முந்திய 24 ஆவது இடத்தை கிளிநொச்சி மாவட்டமும் பெற்றுள்ளன. தேசிய அளவிலான சராசரி தேர்ச்சி வீதத்தை விட (71.66) அதிகமான தேர்ச்சி வீதத்தை ஏனைய பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்கள் கொண்டிருக்கின்ற போதும் வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களும் சராசரி நிலையை விடக் கீழேயே இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கல்வியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இறுதி நிலையில் இருப்பது பற்றி ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் சொல்கிறார்கள். காரணங்களும் குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வருகின்றனவே தவிர, அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான விடயங்கள் எதுவும் சம்மத்தப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. இவ்வாறு தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் மேலும் மேலும் எமது மாணவர்களின் கல்வி வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லவே வழிவகுக்கும். என்றும் சுட்டிக்காட்டினார்.

இந் நிகழ்வில் வாகரை பிரதேச சபை உறுப்பினர் சசிகாந்தன், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அசோகலிங்கம் மற்றும் தியாகராஜா லோகேஸ்வரன் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

















Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |