Home » » நேற்றுடன் ஒரு வருடத்தைபூர்த்திசெய்த பொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்களின் போராட்டம்!

நேற்றுடன் ஒரு வருடத்தைபூர்த்திசெய்த பொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்களின் போராட்டம்!

அம்பாறைமாவட்டத்திலுள்ள  பொத்துவில் ஊறணி 60 கட்டை கனகர் கிராம மக்களின் நிலமீட்புப் போராட்டம் நேற்றுடன் (14- புதன்கிழமை ) ஒரு வருடத்தை பூர்த்திசெய்துள்ளது.. அதேவேளை தொடர்ந்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை ஐவர் மரணமடைந்துள்ளமையால் நேற்றைய  தினத்தை அவர்கள் துக்க தினமாக அனுஷ்டிப்பதாக இக்காணி மீட்புப் போராட்டத் தலைவி புஞ்சுமாத்தையா ரங்கத்தனா தெரிவித்தார்.
இக்கிராம மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிப் பிரதேசங்களில் அகதிகளாக வாழ்ந்த நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் காணிகளுக்குச் செல்வதற்கான அனுமதிகளைக் கோரிய போது வனபரிபால திணைக்களத்துக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அனுமதிகள் வழங்கப்படாது இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசியல்வாதிகளின் உறுதிமொழிகள் செல்லாக்காசாகவே இருப்பதாகத் தெரிவித்த அவர், பிரதேச செயலாளர் அரசாங்க அதிபர் ஆகியோர் தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து வருகின்ற போதிலும் வனபரிபாலன திணைக்களமே இடையூறு செய்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்க அதிபர் மட்டத்தில் காணிகளுக்கான ஆவணங்கள் பரிசிலிக்கப்பட்டுள்ளதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தால் 172 பேரின் பெயர் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட்டுதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் இங்கு வாழ்ந்தமைக்கான சகல ஆவணங்களும் இருக்கின்ற போதிலும் பல்வேறுபட்ட சாட்டுப்போக்குகளை அரசாங்கம் கூறிக்கொண்டு தம்மை தொடர்ந்தும் அதிகளாக வீதி ஓரத்தில் வைத்து வேடிக்கைப் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தாம் வாக்களித்து  தெரிவுசெய்த அரசியல்வாதிகள் ஒருவருடமாகியும் இன்னும் தமதுபிரச்சினையை தீர்த்து வைக்காமல் கதையளந்துகொண்டிருப்பதை அவர்கள் விசனத்தைத் தெரிவிக்கவும்தயங்கவில்லை.
 
வரலாறு!
அம்பாறை மாவட்ட கரையோரத்தின் அக்கரைப்பற்று – பொத்துவில் ஏ4 பிரதான சாலையில் ஊறணி எனுமிடத்தில்; கனகர்கிராம தமிழ்மக்களின் காணிமீட்புப்போராட்டம் தொடங்கி நேற்றுடன் 365ஆவது நாளாகிறது. அவர்கள் கடந்த வருடம் 2018.08.14ஆம் திகதி இப்போராட்டத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.இற்றைக்கு 58வருடங்களுக்கு முன்பு அங்கு வாழ்ந்துவந்த தமது காணிகளைக்கோரி அந்த மக்கள் போராட்டத்திலீடுபட்டுவருகின்றனர். 1960களில் சுமார் 278குடும்பங்கள் வாழ்ந்துவந்தன. 1981களில் முன்னாள்  பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாhரின் காலத்தில் முன்னாள் எம்.பி. அமரர் எம்.சி.கனகரெத்தினத்தின் முயற்சியால் வீடுகட்ட அரை ஏக்கர் நிலமும் பயிர்செய்ய 2ஏக்கர் நிலமும் தரப்பட்டு 30வீடுகளைக்கட்டி கொடுக்கப்பட்டு அவர்கள் மகிழ்ச்சியாக சேனைப்பயிர்ச்செய்கையுடன் வாழ்ந்துவந்தனர்.
1990களில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர்களை கடந்த 28வருடங்களாக அங்கு  வனபரிபாலனஇலாகா குடியேற அனுமதிக்கவில்லையென்பது பிரதான குற்றசாட்டாகும்.
எது எப்படியிருந்தபோதிலும் அவர்கள் வாழ்ந்த பிரதேசம் இன்று மிகவும் பயங்கரமான சூரப்பற்றைகளினால் சூழ்ந்து காடுமண்டிக்காணப்படுகின்றது.  அந்தக்காட்டினுள் பாழடைந்து இடிந்து தகர்ந்த நிலையில் அவர்களது 30வீடுகளும் காணப்படுகின்றன. கூடவே அவர்கள் பாவித்த மலசலகூடங்களும் தகர்ந்தநிலையில் காணப்படுகின்றன. அதாவது அந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் நிறையவேயுள்ளன.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் தொடக்கம் பல அரசியல்வாதிகள் சமுகசேவையாளர்கள் எனப்பலரும் வந்து கலந்துரையாடி பல உறுதிமொழிகளைம்  அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் பிரதேசசெயலாளரும் இக்காணியை மீளளிக்க உறுதிகூறியுள்ளநிலையிலும் போராட்டம் தொடர்கிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |