Home » » பூர்வீகமாகப்பார்த்ததால் கல்முனை தமிழருக்கும், சிங்களவருக்கும் உரித்துடையது!

பூர்வீகமாகப்பார்த்ததால் கல்முனை தமிழருக்கும், சிங்களவருக்கும் உரித்துடையது!

(காரைதீவு நிருபர்) 
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதம் முடிவுற்று 15 தினங்களாகின்ற நிலையில் அரசாங்கம் விரைவில் நியாயமான தீர்வை தர வேண்டும் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
கடந்த நான்கரை வருடங்களாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கிறோம் என்று கூறி காலத்தை கடத்தி விட்டு இன்று இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள் தீர்வு தருகிறோம் என்கிறார்கள்.
அப்போது ஜனாதிபதி தேர்தல் அல்லது நாடாளுமன்ற தேர்தல் வந்துவிடும். எனவே தற்போது ஒன்றும் செய்யமுடியாது. தேர்தல் முடியப்பார்ப்போம் என்பார்கள்.
நாங்கள் யாருடைய கதையை கேட்டோ யாருடைய பின்புலத்திலோ எமது உண்ணாவிரதத்தை தொடங்கவில்லை. நான் த.தே.கூட்டமைப்பை சேர்ந்தவன் என்ற அடிப்படையில் மாத்திரம் எமது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனிடம் சொன்னேன்.
அவர் அப்போது வெளிநாட்டிலிருந்தார். மற்றது கட்சித்தலைவர் அடைக்கலநாதனிடம் தொடர்பு கொண்டேன். முடியவில்லை. ஆக நாம் எந்த அரசியல்வாதிகளையோ, மதவாதிகளையோ உண்ணாவிரத திடலுக்கு அழைக்கவில்லை.
மக்கள் அமோக ஆதரவு தந்தார்கள். கல்முனை தமிழ் மக்கள் மன்றம் கூடவே இருந்தது. நாமும் எமது கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக மக்களுக்காக வைராக்கியத்துடன் இருந்தோம்.
வடக்கு தொடக்கம் நாடெங்கிலுமிருந்து தமிழ் பற்றுள்ள அரசியலாளர்களும் ஏனையோரும் வந்தார்கள். அவர்களது கருத்துக்களை ஊடகங்களுக்கு வெளியிட்டார்கள். அது அவரவர் சுதந்திரம்.
அதற்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை வருகைதந்து எம்மை உற்சாகப்படுத்திய அனைத்து பிரமுகர்களுக்கும் எமது தமிழ் நன்றிகள். சிலருக்கு அசௌகரியம் ஏற்பட்டதற்காக கவலையடைகின்றோம். அதற்கும் எமக்கும் துளி கூட தொடர்பில்லை
ஞானசார தேரர் வந்தது பற்றி விமர்சனம் கிளம்பியது. உண்மையில் எமது அணியில் ஒரு பௌத்ததேரரும் உண்ணாவிரதமிருந்தார். அவர் தற்சமயம் கல்முனையில் வாழ்பவர்.
அவர்மட்டுமல்ல மேலும் பல சிங்களக்குடும்பங்கள் வாழ்கின்றன. அந்த அடிப்படையில் கல்முனையின் ஓரங்கம் என்ற அடிப்படையில் அவர் சார்ந்த மதத்தலைவர்கள் தினமும் வருகை தந்தனர்.
அவர்களுக்கும் கல்முனை நகர் சொந்தம். அது அவர்களது உரிமை. அவர்கள் 3ஆம் தரப்பல்ல. பூர்வீகமாக பார்த்தால் தமிழரும் சிங்களவருமே முதலாந்தரப்பு என குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |