Home » » பயங்கரவாதி சஹ்ரானுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட தகவல்கள்

பயங்கரவாதி சஹ்ரானுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட தகவல்கள்

பயங்கரவாதி சஹ்ரானுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று ஆஜரான ஹிஸ்புல்லாஹ் தன்னுடைய வாக்குமூலத்தினை அளித்தார்.
கடந்த 2015 காலப்பகுதியில் சஹ்ரானுக்கும் இராணுவத்துக்கும் தொடர்பு இருந்ததாகவும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
2017 வரை சஹ்ரான் ஹாசீம் மதத் தலைவராகக் கருதப்பட்டார். இதன் பின்னர் அவர் ஐ.எஸ். குழுவுடன் தொடர்பு கொண்டதாகவும் தெரிய வருகிறது.
உலகில் முஸ்லிம்கள் பெரும்பான்மை என்பதை நான் கூறினேன். அச்சத்திலுள்ள முஸ்லிம்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அந்த கருத்தை நான் வெளியிட்டேன்.
2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சஹ்ரான் என்னை தோற்கடித்தார். எல்லா அரசியல் தலைவர்களை போல நான் சஹ்ரானை சந்தித்தேன். சஹ்ரான் என்னையும் எனது குடும்பத்தினரையும் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் ஒரு பயங்கரவாதி. ஆனால் அவர் அப்போது அப்படி இருக்கவில்லை.
2017 ற்கு பின்னர் சஹ்ரானோ அவரது சகாக்களோ காத்தான்குடியில் இருக்கவில்லை. அவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்களா என்பது எனக்கு தெரியாது.
சஹ்ரான் இப்போது இல்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த தேர்தல் காலங்களில் எனக்கு தொல்லை இருக்காது. எதிர்ப்பின்றி நான் செயற்படலாம்.
காத்தான்குடியில் அரபு மொழிகளில் பெயர்ப்பலகைகள் இருப்பது அரபு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவரவே. அரபு மொழி பெயர்ப்பலகைகள் இடக் கூடாது என்று சட்டம் இல்லை.
வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால், முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவதன் ஊடாக இரத்த ஆறு ஓடும் என நான் கூறியது உண்மைதான். கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை. முஸ்லிம் மக்கள் தான் ஆயுதம் ஏந்துவார்கள் என்று கூறினேன் என அவர் குறிப்பிட்டார்.
தீவிரவாதம் தொடர்பில் பொதுமக்களுக்கு பிரசங்கம் செய்வதற்கும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதற்கும், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் பொலிஸார் அனுமதி கொடுத்திருந்தார்கள் என்றும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நாடாளுமன்றத் தெரிவு குழு முன்னிலையில் நேற்று முன்தினம், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சாட்சியம் அளித்திருந்தார்.
இதன்போது பயங்கரவாதி சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு நேரடி தொடர்புகள் உள்ளதாகவும், அவரின் அரசியல் செயற்பாட்டுக்கு உதவியதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |