Home » » முதலில் எமது மொழியை நாம் அங்கீகரிக்க வேண்டும்: மட்டக்களப்பு மாநகர முதல்வர்

முதலில் எமது மொழியை நாம் அங்கீகரிக்க வேண்டும்: மட்டக்களப்பு மாநகர முதல்வர்

எமது முன்னோர்களின் அர்ப்பணிப்பு மிக்க தியாகத்தால் கிடைக்கப்பெற்ற அரச கருமமொழி எனும் அந்தஸ்தைக் கூட பின்பற்ற நாட்டமில்லாதவர்களாகவே எமது தமிழ் மக்களில் பலர் இருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
முதலில் எமது மொழியை நாம் அங்கீகரிக்க வேண்டும் அதன் பின்னரே ஏனையவர்களிடம் அது பற்றி கோர முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் அவர்,
1956ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் தனிச் சிங்கள அரச கரும மொழிச் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவளித்திருந்தது. எதிராக தமிழ்க் கட்சிகளும், சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்திருந்தன.
இதன் பின்னர் தமிழையும் அரச கரும மொழியாக அங்கிகரிக்க வேண்டும் என்று தமிழ் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் பேராக 1978ஆம் ஆண்டு யாப்பில் அத்தியாயம் 4, உறுப்புரை 18இல் இலங்கையின் அரச கரும மொழி சிங்களமாக வேண்டும் என்பதுடன், உறுப்புரை 19இல் இலங்கையின் தேசிய மொழியாக சிங்களமும் தமிழும் காணப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
21(1) உறுப்புரையில் அரச கரும மொழியே இலங்கையின் நிர்வாக மொழியாதல் வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டு இன்று கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களை எட்டியுள்ள போதும் நடைமுறையில் தமிழ்மொழியானது எவ்வாறான சிக்கலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது என்பது பற்றியே இங்கு நாம் ஆராயவேண்டியுள்ளது.
இலங்கையில் தமிழ் மொழியும் அரச கருமமொழி என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழ் பேசும் மக்கள் தமது கருமங்களை செய்துகொள்ள வேண்டுமாயின் கட்டாயமாக சிங்களமொழி தெரிந்திருக்க வேண்டிய நிலைக்கே தள்ளப்படுகின்றனர்.
இன்று அரச அலுவலகங்களாக இருக்கட்டும் தனியார் அலுவலகங்களாக இருக்கட்டும் இங்கு தமிழ் மக்கள் ஒரு விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இங்கு மொழியே தலையாய பிரச்சினையாக இருக்கின்றது. குறைந்தளவு தமக்கு என்ன தேவை என்று தமது மொழியில் கேட்டு கொள்வதற்கான நிலைமை கூட இல்லாதிருக்கின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கிலும் இந்நிலை இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. சிங்கள மொழியே முதன்மைப்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒருவகையில் எமது தமிழ் அதிகாரிகளும் துணைபோய் விடுகின்றார்கள். தமிழும் அரச கரும மொழி தான் என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்க வேண்டும்.
எமது பிரதேசங்களில் தமிழ் மொழியிலேயே அரச கடமைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த அந்தஸ்த்து ஒன்றும் இலகுவாக கிட்டிவிடவில்லை பலரின் தியாகங்களின் பேராகவே கிடைக்கப்பெற்றுள்ளது.
தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து இல்லாதமையினாலேயே இந்நாடு கடந்த பல வருடங்களில் பெரும் சீரழிவுக்கு உள்ளாகியிருந்தது. இதை ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான கி.துரைராஜசிங்கம், தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் க.இரகுவரன் மற்றும் மாநரகசபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |