Home » » அரசுக்கான ஆதரவு தொடரும் - பின்னிலை எம்.பிக்களாக செயற்படுவோம் - ஹக்கீம்

அரசுக்கான ஆதரவு தொடரும் - பின்னிலை எம்.பிக்களாக செயற்படுவோம் - ஹக்கீம்


அமைச்சுப் பதவிகளை துறந்தாலும் , அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த இடமளிக்கமாட்டோம். நாடாளுமன்றத்தில் பின்னிலை எம்.பிக்களாக செயற்பட்டு அரசுக்கான ஆதரவை வழங்குவோம் என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, " நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து பிரதமருடனும், அமைச்சர்களுடனும் கலந்துரையாடினோம்.
பிரதமருடன் பேசியதன் பின்னர் பதவிகளை கூட்டாக இராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தோம். பிரதமருடனான சந்திப்பின் பின்னர் எம்மால் சுயாதீனமாக எடுக்கப்படும் முடிவுக்கு ஆதரவளிக்கப்படும் என அவர்கள் அறிவித்தனர்.
அத்துடன், முஸ்லிம் அரசியல்வாதிகளை மையப்படுத்தி நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் இரத்த கலரியை உருவாக்கவும் சிலர் முயற்சிக்கின்றனர்.
எனவே, நாட்டின் நலன், அமைதி உட்பட மேலும் பல காரணங்களைக் கருத்திற்கொண்டே நாம் இந்த முடிவை எடுத்தோம். சர்வதேச மட்டத்தில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடாது என்பதிலும் உறுதியாக நிற்கின்றேன்.
அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் இன்னும் நிறுத்தப்படவில்லை. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களும் வதைக்கப்படுகின்றனர். இவை நிறுத்தப்படவேண்டும். அனைத்துவித நடவடிக்கைகளும் சட்டத்தின் பிரகாரம் இடம்பெறவேண்டும் என்றார் ஹக்கீம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |