Home » » கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்திலே நியாயத்தை பேசினார்களா?

கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்திலே நியாயத்தை பேசினார்களா?

நாடாளுமன்றத்திலே ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது, கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்திலே நியாயத்தை பேசினார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
உண்மையான நல்லிணக்கம் என்பது எப்போது ஏற்படும்? வெளிநாட்டு தூதுவர்களோடு பேசுவதாலா? பத்திரிகைக்கு அறிக்கை விடுவதாலா? அல்லது நாடாளுமன்றத்தில் வந்து தொண்டை கிழிய பேசுவதாலா?
உண்மையான நல்லிணக்கம் என்பது செயற்பாட்டு ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். வெட்டி பேச்சிலும், பேசுவதொன்று செய்வதொன்று என இருக்க முடியாது.
நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் கடந்த 3 தசாப்தம் தாண்டிய காலக்கட்டத்தின் நசுக்கப்பட்டு கொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக தமிழர் சமூகம் இருக்கின்றது.


இன்று இந்த நாடாளுமன்றத்திலே பேசுகின்ற நான், ஒரு பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக, அழிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக, காணாமலாக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக தான் பேசி கொண்டிருக்கின்றேன்.
நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் தங்களுடைய காரியங்களை கச்சிதமாக நிறைவேற்றி கொள்வது நல்லிணக்கம் ஆகாது.
உங்களுக்கு தெரியும் கடந்த 30 வருட யுத்தத்திலே ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அப்பாவி மக்கள், அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதன் உச்சக்கட்டமாக 2009இல் எத்தனையோ பேர் கொன்று குவிக்கப்பட்டார்கள்.
நாங்கள் அப்பாவி முஸ்லிம் மக்களை நேசிக்கின்றோம். அப்பாவி சிங்கள மக்களை நேசிக்கின்றோம். அப்பாவி தமிழ் மக்களை நேசிக்கின்றோம். எத்தனை முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறினார்கள்?
இந்த சபையிலே நான் சவாலாக கேட்கின்றேன். அதற்கு எத்தனை பேர் அனுதாபமாக பேசினார்கள்? என்பதை சொல்ல வேண்டும்.
இந்த நாடாளுமன்றத்திலே ஒரு முஸ்லிம் அரசியல்வாதியாவது, அந்த கல்முனை பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற விடயத்திலே நியாயத்தை பேசினார்களா? இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகின்றது?
அதுமாத்திரமல்ல இந்த நாடாளுமன்றத்திலே தற்போது இருக்கின்ற கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா வடக்கு, கிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என பேசினார்.
அப்பொழுது அவருடைய கூற்றை இந்த நாடாளுமன்றத்தில் விஜேயதாச ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து பேசிய போது, அந்த கூற்று பிழையானது என்று எந்த முஸ்லிம் அரசியல்வாதி அவருக்கு எதிராக இந்த இடத்திலே பேசினார்? எல்லோரும் பார்த்துக் கொண்டு பேசாமல் தான் இருந்தார்கள்.
அதுமாத்திரமல்ல இன்று அதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தமிழர்களுக்குரிய கோயில் காணியை எடுத்து நான் அதை பள்ளிவாசலுக்கு கொடுத்தேன். இன்று அந்த இடத்திலே மீன் சந்தை கட்டப்பட்டு இருக்கின்றது என சொன்னார்.
இன்று எத்தனை நாட்கள்? எத்தனை இடங்களில்? இதே போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றது? எந்த அரசியல்வாதி அதை தடுத்து பேசினர்? இந்த நிலையில் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்பட போகிறது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |