ஹிஸ்புல்லா அதிகாரத்தினை பயன்படுத்தி காணி சுவீகரிப்புக்கள், அரச நியமனங்களை பெருமளவில் செய்து வருகின்றார், அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றியமை ஆகியவற்றை பகிரங்கமாகவே மேற்கொண்டுள்ளார் என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,
கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லா, அலிசாஹிர் மௌலானா, அமீர் அலி என அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நீண்ட காலமான நட்பு உறவுகள் எனக்கு உள்ளன. ஆனால் அரசியல் ரீதியாக முஸ்லிம் ஏகாதிபத்தியத்தினை நான் எதிர்த்தே வந்திருக்கின்றேன்.
ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டவுடன் அதற்கு எதிராக கையெழுத்து வேட்டையை நடத்தினேன். இரண்டாயிரம் கையொப்பத்துடன் அவரை நீக்கும் கோரிக்கையை ஜனாதிபதி,பிரதமருக்கு அனுப்பி வைத்தபோதும் அதற்கு இதுவரையில் எவ்விதமான பதிலும் அளிக்கப்படவில்லை.
முன்னதாக பல்கலைக்கழகத்தினை நிர்மானிப்பதற்கான ஆரம்பச் செயற்பாடுகளை முன்னெடுத்தபோதே நான் எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தேன்.
ஹிஸ்புல்லா அதிகாரத்தினை பயன்படுத்தி காணி சுவீகரிப்புக்கள், அரச நியமனங்களை பெருமளவில் செய்து வருகின்றார். குண்டுவெடிப்பின் சூத்திரதாரியான சஹ்ரானுடன் கைலாகு கொடுத்திருக்கின்றார்.
ஓட்டமாவடியில் இந்துக்கோவிலுக்கான காணி சுவீகரிப்பு, அமைச்சு அதிகாரத்தினைப் பயன்படுத்தி நீதிபதியை இடமாற்றியமை ஆகியவற்றை பகிரங்கமாகவே மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அதிகாரத்தினை கோலோச்சுவதற்காக பயன்படுத்தும் ஒருவர் ஆளுநராக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால் இத்தனை விடயங்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிந்திருந்தோம் அவர் மீது எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமலிருக்கின்றார். அதற்கான பின்னணியை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் தவறுகள் உள்ளன. கிழக்கில் தீவிரவாதம் தோன்றுவதற்கு கூட்டமைப்பே அத்திவாரமிட்டது.
கிழக்கு மாகாணத்தில் ஏழு ஆசனங்களைக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸிடம், 11ஆசனங்களைப் பெற்றிருந்த கூட்டமைப்பு ஆட்சியைக் கையளித்தது. ஹாபீஸ் நஸீர் முதலமைச்சராகி பாரிய ஆதிக்கத்தினைச் செலுத்தினார்.
அப்போது கூட்டமைப்பு தட்டிக்கேட்கவில்லை. குண்டுத்தாக்குதலின் பின்னரே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குரலெழுப்புகின்றார்கள். அன்று நாங்கள் வீதியிலிறங்கிப்போரடிய போது இவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.
கருத்துக்களை முன்வைப்பதற்கு திராணி இருந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சரி அதிலிருந்து வெளியேறியவர்களும் சரி தவறுகளைச் செய்துவிட்டு இப்போது கோசமிடுவதால் பயனில்லை என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments