உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எப்படி இலங்கையர்களிற்கு வலைவீசியது, அதில் எத்தனை பேர் சிக்கினார்கள் என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பிபிலை மற்றும் சில இடங்களில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஐ.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக, இலங்கையிலிருந்து சென்று சிரியாவில் ஐ.எஸ் அமைப்புடன் தங்கியுள்ள ஒருவரின் பெற்றோரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மகனை பார்ப்பதற்காக அவர்கள் சிரியாவிற்கு சென்று பல மாதங்கள் தங்கியிருந்ததாக தெரிவித்துள்ளனர். சிரியாவின் மகன், மருமகள் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தெரிவித்தனர்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தில் 20 இற்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத குழு திட்டமிட்டிருந்தது. எனினும், அவர்களிற்குள் ஏற்பட்ட உடைவால் பல இடங்களில் தாக்குதல் நடத்த முடியவில்லை.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இரண்டாம் கட்ட தாக்குதல் திட்டமொன்றையும் சஹ்ரான் குழு வைத்திருந்துள்ளது. தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்கள் சிலரது மனைவிமார் அதை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர். எனினும், சாய்ந்தமருது வீடு முற்றுகையுடன் அந்த திட்டம் தோல்வியடைந்தது.
சஹ்ரான் குழு நாடு முழுவதும் பயிற்சி முகாம்களை உருவாக்கியதை வைத்து கவனிக்கும்போது, அவர்கள் நீண்டகால திட்டத்துடன் இயங்கியதாகவே தெரிகிறது. வனாத்துவில்லு, காத்தான்குடி, ரிதிதென்ன, நுவரலிய பயிற்சி முகாம்கள் சிக்கியுள்ளன. இதில் வனாத்துவில்லு தென்னந்தோட்டம் மாதாந்தம் 80,000 ரூபா குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது.
ரிதிதென்ன பயிற்சி முகாமில் நிலத்தடி சிறைச்சாலைகளை உருவாக்கி, தௌஹீத் ஜமா அத்திற்கு எதிராக கருத்துக்களை கொண்டவர்களை அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளார்.
இதேவேளை, சஹ்ரான் மனைவியிடம் நடத்தப்படும் விசாரணையில், நௌபர் மௌலவிதான் தனது கணவனை தீவிரவாதத்தின் பக்கம் திசைதிருப்பியதாக தெரிவித்துள்ளார். தற்போது சவுதியில் தங்கியுள்ள நௌபர் மௌலவியும், மேலும் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர. கைதானவர்களில் சிலர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சவுதிக்கு சென்றவர்கள்.
ஏப்ரல் 17ம் திகதி பாணந்துறையில் இருந்து சஹ்ரானின் மனைவி மற்றும் மட்டக்களப்பு, நீர்கொழும்பு தேவாலய மனித வெடிகுண்டுகளின் மனைவிமார் ஒன்றாக அம்பாறைக்கு பயணமானார்கள். பாணந்துறையில் இருந்து புறப்படுவதற்கு முன்னரான சம்பவங்களை சஹ்ரான் மனைவி தெரிவித்துள்ளார்.
“சஹ்ரானை விட்டு பிரிவதற்கு நான் காத்திருந்தேன். ஆனால் அவர் அதை அனுமதிக்கவில்லை. இருவரும் ஒன்றாக இறந்துவிடலாம் என்றுதான் கூறுவார். ஆனால், அன்று சஹ்ரானை வித்தியாசமானவராக பார்த்தேன். அவர் அன்று ஓரளவு பயந்தவராக காணப்பட்டார். என்னை கட்டியணைத்து அழுதார். சஹ்ரான் அழுது அதற்கு முன்னர் நான் பார்த்ததேயில்லை. நாங்கள் திரும்பி வரமாட்டோம். உன் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள். நாங்கள் அல்லாவிடம் செல்கிறோம் என்றார்.
முஸ்லிம்களிற்கு தனிநாடு அவசியம் என சஹ்ரான் எப்பொழுதும் சொல்வார். அவர் அதி தீவிர நிலைப்பாட்டிற்கு சென்றிருந்தார். என்னை தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கவில்லை. போன் இருந்தது. ஆனால் யுரியூப், பேஸ்புக் பார்க்க தடை.
சாய்ந்தமருது வீட்டில் இருந்தபோது, நாங்கள் சுற்றிவளைக்கப்பட்டோம். சண்டையிட வேண்டுமென சஹ்ரானின் சகோதரர் சொன்னார்.
வீட்டின் நடுப்பகுதியில் சஹ்ரானின் தாய், தந்தை, தாத்தா, சகோதரி, சகோதரியின் கணவன், எனது மகன், மற்றவர்கள் எல்லோரும் இருந்தனர். மத அனுட்டானங்களை சொல்ல ஆரம்பித்தனர். நான் மகளை தூக்கிக் கொண்டு குளியலறைக்கு சென்றேன். அப்போது வீட்டுக்குள் பெரிய வெடிச்சத்தம் கேட்டது“ என்று தெரிவித்துள்ளார்.