Home » » உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக காத்தான்குடியில் பரிசோதனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக காத்தான்குடியில் பரிசோதனை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி இரவு 10.20 மணியளவில் இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி ஆரயம்பதி பாலமுனை பகுதியில் அமைந்துள்ள நபர் ஒருவருக்குச் சொந்தமான 43 ஏக்கர் காணியில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஸ்கூடி பெப் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் குண்டுகளை கட்டி வெடிக்கச் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த காணி கடந்த 2018ம் ஆண்டு ஹஸ்னால் பஸ்ரி என்ற நபரினால் 18 கோடி ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டு, விலங்குப் பண்ணைகள் நடாத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தினமன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய முகம்மது ஹஸ்துன் என்ற நபரே இந்த அனைத்து குண்டுகளையும் தயாரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடியில் பரீட்சார்த்த நோக்கில் வெடிக்கச் செய்யப்பட்ட குண்டுக்காக ஏழு கிலோகிராம் எடையுடைய சீ4 ரக வெடிபொருட்கள் பயன்படுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேரக் குண்டு அல்லது ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்த குண்டு பரீட்சார்த்தமாக வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் தடவை குண்டு வெடிக்கவில்லை எனவும் இரண்டாவது தடவையே குண்டு வெடித்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இணைய தளத்தின் ஊடாக தகவல்களைப் பெற்றுக் கொண்டு இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குண்டு தயாரிப்பதற்காக மற்றுமொரு நபரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதிலும் அந்த நபர் யார் என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
கடந்த 16ம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் பற்றி புலனாய்வுப் பிரிவினர் கவனம் செலுத்தியிருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம் என கொழும்பு சிங்கள இணைய தளமொன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |