சாரா எனப்படும் புலஸ்தினி மற்றும் முஹமட் ஹஸ்துன் ஆகியோரின் திருமண வாழ்க்கை தொடர்பான பல தகவல்களை சிலோன் தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் ஆர்.அப்துர் ராஸிக் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பத்திரிகையில் அவர் தெரிவித்துள்ளவை வருமாறு
கேள்வி- நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்திய முஹமட் ஹஸ்துன் முன்னறியப்பட்டவரா?
பதில் - நான் கொழும்பைச் சேர்ந்தவன். முஹமட் ஹஸ்துன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். ஓட்டமாவடியில் எமது கிளையொன்று உள்ளது. அங்கு கூட அவர் வந்ததில்லை. அவர் எமது உறுப்பினர் கூட கிடையாது.
கேள்வி - அப்படியாயின் அவருடனான தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?
பதில் - 2015.08.04 அன்று ஸ்ரீலங்கா தௌஹீத் அமைப்பின் தலைமையகத்துக்கு அந்த இளைஞனும், ஒரு யுவதியும் வந்தார்கள்.
அப்போது நான் அந்த அமைப்பின் செயலாளராக இருந்தேன். அங்கு வந்த அந்த இளைஞன் குறித்த யுவதி இஸ்லாம் மதத்தை தழுவ உள்ளதாகவும் தங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறும் கோரினார்.
அன்று தான் நானும் அவர்களை முதற்தடவையாக சந்தித்திருந்தேன். அதன் பின்னர் அந்த பெண்ணின் குடும்பத்தாரின் விபரத்தை கோரி அவர்களை கொழும்புக்கு வரவழைத்திருந்தோம்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் தலைமையத்திலேயே அவருடைய குடும்ப உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது மனித உரிமை அலுவலக அதிகாரியொருவரும் இருந்தார்.
பேச்சுவார்த்தை நடைபெற்ற போது, புலஸ்தினியின் தாயார் இந்து மதத்திலேயே இருக்க வேண்டும் தன்னுடனேயே வர வேண்டும் என்று ஆதங்கத்துடன் கண்ணீர் விட்டுக் கூறவும், புலஸ்தினி அதனை மறுத்தார்.
1996 இல் பிந்த புலஸ்தினி மேஜராக இருப்பதால் அவருக்கு முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளது என்று பொலிஸ் அறிவுரை வழங்கியது.
பின்னர் ஆகக்குறைந்தது ஐந்து நாட்களாவது தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தாயார் பொலிஸாரிடத்தில் கோரவும் அதற்கும் அனுமதி கிடைத்தது.
கேள்வி - புலஸ்தினி தாயாருடன் சென்ற போது ஹஸ்துன் என்ன செய்தார்? அவர் தேசிய தௌஹித் அமைப்பில் அங்கத்துவத்தை கொண்டிருந்தமை பற்றி நீங்கள் அறிவீர்களா?
பதில் - இந்தப் பேச்சுகள் நடைபெற்ற தருணத்தில் ஹஸ்துன் ஒதுங்கியே இருந்ததை நாம் அவதானித்தோம். அவருடைய குடும்பத்திலும் எவரும் வந்திருக்கவில்லை.
ஆனால் அவர் தேசிய தௌஹீத் அமைப்பில் இருந்தாரா இல்லையா என்பது பற்றி எமக்கு தெரியாது. ஒருவேளை அவர் அந்த அமைப்பில் இருந்திருந்தால் இங்கு வராது காத்தான்குடிக்கல்லவா சென்றிருக்க வேண்டும்.
கேள்வி - புலஸ்தினிக்கும் ஹஸ்துனுக்குமான திருணம் எவ்வாறு நடைபெற்றது?
பதில் - தாயாருடன் சென்ற புலஸ்தினி மீண்டும் வரவே இல்லை. ஆனால் அவர் 2015.08.04 அன்று, தான் இஸ்லாமிய மதத்தை தழுவுவதாகவும் தனது பெயரை சாரா யஸ்மின் என மாற்றிக்கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.
அதற்கான எழுத்து மூல ஆவணம் எம்மிடத்தில் உள்ளது. பின்னர் 2015.09.25 அன்று, தலைமையகத்துக்கு இருவரும் வந்தார்கள்.
தன்னைத் தாயார் அழைத்துச் சென்றதால் தனது விருப்பப்படி இஸ்லாமிய மதத்தை பின்பற்ற முடியவில்லை என்றும், தனது வகுப்புத் தோழனான ஹஸ்துனை திருமணம் முடித்து வைக்குமாறும் கோரியதோடு அதற்கு எழுத்து மூலமான கடிதத்தையும் எமக்கு வழங்கினார்.
ஹஸ்துனும் புலஸ்தினியை திருமணம் முடிக்க சம்மதிப்பதாக எழுத்து மூலமான உறுதியை வழங்கினார்.
அச்சந்தர்ப்பதில் கூட சாராவின் எதிர்காலத்தினைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கும் தீர்மானத்தை நாம் எடுத்ததோடு அது பற்றிய அறிவிப்பினை அருடைய தாயாருக்கும் விடுத்தோம்.
கேள்வி - அதன்பின்னர் அவர்கள் பற்றி ஏதும் அறிந்திருந்தீர்களா?
பதில் - இருவருக்கும் இடையில் சர்ச்சைகள் நீடிக்கவும் புலஸ்தினி தன்னுடைய சித்தியை நாடி ஹஸ்துனை பிரிந்து சென்றார்.
அவ்வாறு பிரிந்து செல்லும் போது கல்முனை பொலிஸ் நிலையத்தில் 2015.12.31 அன்று முறைப்பாடு பதிவு செய்து விட்டு விவாகரத்துக்கான கோரிக்கையும் செய்துள்ளார்.
இந்த விடயம் பற்றி அவர் எமக்கு எழுத்து மூலமான கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் ஹஸ்துன் மற்றும் அவரது அண்ணன் முன்னிலையில் விவாகரத்து கோரியது உட்பட இஸ்லாம் சமயத்திலிருந்து விலகி தனது சொந்த இந்து சமயத்தையே பின்பற்றவுள்ளதாகவும், பெயர் மாற்றத்தினையும் நீக்கிக் கொள்வதாகவும் எங்களது அமைப்புடனான சகல விடயங்களையும் துண்டித்துக் கொள்வதாகவும் விலக்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்துடன் அவருடனான அனைத்து உறவுகளும் இல்லாது போய்விட்டன.
கேள்வி - பின்னர் ஹஸ்துன் உங்களை தொடர்பு கொள்ளவில்லையா,
பதில் - இல்லை
கேள்வி - ஆனால் புலஸ்தினியை காணவில்லை என்று அவருடைய தாயார் உங்களை தொடர்பு கொண்டுள்ளதாக கூறுகின்றாரே?
பதில் - ஆம், 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவருடைய அம்மா தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது மகளை காணவில்லை என்று கூறினார்.
இரண்டு மாதத்துக்கு முன்னர் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், குருநாகல் - நாரம்மல பகுதியில் வீடு வாங்குவதற்கு 15 இலட்சம் ரூபா பணம் கேட்டார் எனவும் அதனை தயார் செய்த பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார்.
அப்போது தாயாரின் கண்ணீர் கோரிக்கையை கருத்திற் கொண்டு எமது கிளை சகோதரர்கள் மற்றும் பாதுகாப்பு துறையின் சிலருக்கும் இந்த பெண்ணின் விபரத்தை வழங்கி தாயார் தேடும் விடயத்தினைக் கூறியிருந்தோம்.
தற்போது தாயார் ஆதங்கத்தில் என்மீது குற்றம் சாட்டுகின்றார். ஆனால் அவருக்கு மனிதாபிமானமாக நாம் உதவியிருக்கின்றோம் என்பதை அவர் நன்கு அறிவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: