Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

14 வயதில் காதல்… கர்ப்பம்… திருமணம்: எப்படியிருந்தது சஹ்ரானின் குடும்ப வாழ்க்கை?

நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் சூத்திரதாரிகளின் வலையமைப்பு பற்றிய அதிர்ச்சி தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. சிறிய குழுவாக இருந்து, யாரும் எதிர்பாராத விதமாக பெரிய நாசத்தை ஏற்படுத்திய இந்த குழு பற்றிய புதியபுதிய தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தகுழு பற்றி எல்லாம் அறிந்த சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா உயிருடன் சிக்கியது, விசாரணைகளிற்கு பெரிய வாய்ப்பாக அமைந்தது. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பாத்திமா, ஓரளவு தேறிவரும் நிலையில், புலனாய்வாளர்களால் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.
விசாரணைகளில் கிடைத்த புதிய தகவல்கள், பாத்திமாவின் பெற்றோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சஹ்ரானின் கறார் போக்கால் பாத்திமா பெரும் கொடுமையை அனுபவித்து வந்ததை புரிய முடிகிறது.
பாத்திமாவின் பிறப்பிடம் குருணாகல். மொஹமட் ஹூசைன் அப்துல் காதர்- யாசின் சிதி ஷகிலா பெற்றோர். இரண்டு சகோதரிகள், நான்கு சகோதரர்களுடன் அவர் பிறந்தார்.

பாத்திமா 9ம் வகுப்பு வரையே கல்வி கற்றவர். பாத்திமாவும், சஹ்ரானும் சந்தித்தது சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு.
சஹ்ரான் இளம் வயதிலேயே அதிதீவிர முஸ்லிம் தீவிரவாத எண்ணங்களுடையவராக மாறியிருந்தார். அதனாலேயே சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, காத்தான்குடியிலிருந்து வெளியேறி நுவரெலியாவிற்கு வந்தார். அங்குதான் கல்வியை தொடர்ந்தார். அப்போது குருணாகலிற்கு குர்ஆன் கற்பிக்க ஆரம்பித்திருந்தார்.
குருணாகலின் நரமலையில் குர்ஆன் கற்றுக்கொடுக்கும் இடத்திலேயே அவர்கள் முதன்முதலில் சந்தித்தனர். குர்அன் கற்றுக்கொடுக்க சஹ்ரான் அங்கு சென்றார். அப்போது இருவருக்குமிடையில் காதல் ஏற்பட்டது.
அந்த காதலை பாத்திமா தனது வீட்டில் தெரிவித்தபோது, தந்தையார் முதலில் சம்மதிக்கவில்லை.
பாத்திமா அப்போது 14 வயது சிறுமி. திருமணத்திற்கு இன்னும் சிறிதுகாலம் இருக்கலாமென தந்தையார் கருதினார்.
ஆனால் 15 வயதில் பாத்திமாவின் திருமணத்திற்கு தந்தையார் அனுமதியளிக்க வேண்டிய நிலைமை வந்தது. காரணம், அப்போது பாத்திமா கர்ப்பமாகியிருந்தார். இதனால் உடனடியாக திருமணம் நடந்தது. அது 2009ஆம் ஆண்டு.
திருமணத்தின் பின் சஹ்ரான் தம்பதி குளியாப்பிட்டியவில் வாடகை வீட்டில் குடியேறினர். பின்னர், காத்தான்குடியில் வாடகை வீட்டில் பாத்திமாவின் தந்தை குடியேறினார்.

சஹ்ரான் தம்பதிக்கு ஒரு மகன், மகள் பிறந்தனர். ஆனால், குடும்ப வாழ்க்கையில் சஹ்ரான் திருப்தியடையவில்லையென அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் மதவெறியால் பீடிக்கப்பட்டிருந்தார். மத கட்டுப்பாடுகளால், மனைவியை கடுமையாக துன்புறுத்தினார் என்கிறார்கள் பாத்திமாவின் பெற்றோர்.
இது குறித்து பாத்திமாவின் தந்தை குறிப்பிடும்போது- “சஹ்ரானுடன் மிகவும் கடினமாக வாழ்க்கையை பாத்திமா வாழ்ந்தார். அதை பின்னர்தான் நாம் தெரிந்து கொண்டோம். சஹ்ரானுடன் பயணம் செய்யும்போது, அவர் முழுமையாக மறைக்கப்படுவார். அவர் மற்றவர்களை பார்க்கவும் அனுமதிக்கப்படமாட்டார். அவர் நாளாக நாளாக மதவெறியராக, இரகசியமானவராக மாறிக் கொண்டிருந்தார். மார்க்க ஆசிரியர்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தை கவனிப்பதை விட, இதை செய்வதைத்தான் முக்கியமானதாக கருதினார். அடுத்ததாக காத்தான்குடி முஸ்லிம்களுடன் மோதிக் கொண்டிருந்தார்“
தௌஹீத் ஜமா அத் உருவாக்கப்பட்ட பின்னர பாத்திமாவின் பெற்றோருடன், சஹ்ரானும் கருத்து வேறுபாடு கொண்டார். 2017இல் காத்தான்குடி மோதலின் பின் சஹ்ரானின் சகோதரர்களும் தேடப்பட தொடங்க, சஹ்ரானையும் பொலிசார் தேட தொடக்கினர்.
அந்த சம்பவத்தின் பின் காத்தான்குடியில் வசிக்க முடியாமல் போக, பாத்திமாவும் இரண்டு குழந்தைகளும் குருணாகலிற்கு சென்றனர். மாதம் ஒருமுறை அங்கு சென்று குடும்பத்தை பார்ப்பார் சஹ்ரான்.
“மூத்த மகன் கொகுனுகொல ஆரம்ப பாடசாலையில் தரம் 3 இல் சேர்க்கப்பட்டார். நாங்கள்தான் இரண்டு பிள்ளைகளையும் கவனித்தோம். சஹ்ரான் தனியாக- இரகசியமாக அவரது வாழ்க்கையை உருவாக்கினார். சில சமயங்களில் 3 மாதங்கள் கூட தொடர்பின்றி இருந்தார். குடும்பத்தையும், பாத்திமாவையும் கொடூரமாக நிர்வகித்தார். இப்படி பல மாதங்களாக தொடர்பின்றி இருந்தால் நாங்கள் என்ன செய்வதென ஒருமுறை பாத்திமா கேட்டார். அதற்கு, கொடூரமாக அவருடன் சஹ்ரான் நடந்து கொண்டார். குடும்பத்தில் எல்லோரும் அவருக்கு பயந்து மௌனமாக இருந்தோம்“ என்கிறார் பாத்திமாவின் தந்தை.
“ஒருநாள் அவர் குருணாகல் வந்தார். குழந்தைகளை கொழும்பிற்கு கொண்டு சென்று வாழப் போவதாக கூறினார். ஏன் கொழும்பில் வாழ முடிவெடுக்கிறீர்கள் என கேட்டோம். அவர் பதிலளிக்கவில்லை. குழந்தைகளும், பாத்திமாவும் கேள்வியில்லாமல் வாகனத்தில் ஏறினார்கள்“ என்கிறார்கள் பெற்றோர்.
கொழும்பில் இடத்திற்கிடம் அவர்கள் மாறி வசித்தார்கள். எங்களுடனும் தொடர்பின்றி போனது. இதனால் பாத்திமா, கணவனின் குற்றநடவடிக்கைகளை தட்டிக் கேட்க முடியாமல் போயிருக்கலாம் என்றனர்.
ஏப்ரல் 19ம் திகதி சஹரான் தனது மனைவி, குழந்தைகளுடன் பாணந்துறையிலுள்ள வீட்டிற்கு சென்றார். நீர்கொழும்பு தற்கொலைதாரி, அவரது மனைவி புலஸ்தினி ராஜேந்திரன் என்ற ஷாரா, இன்னொரு தற்கொலை குண்டுதாரி மொஹமட் நஸீர், அவரது மனைவி பிரஸா ஆகியோரும் அங்கிருந்தனர்.
பாணந்துறையில் தங்கள் மனைவி, பிள்ளைகளுடன் எல்லோரும் இறுதி உணவு எடுத்துக் கொண்டனர். அன்றைய தினமே சஹ்ரானின் சகோதரன் ரில்வான், சஹ்ரானின் மனைவி பாத்திமா, ஹிடாயா, ஸாரா, பிரஸா ஆகியோர் அம்பாறைக்கு புறப்பட்டனர். அந்த நேரத்திலேயே, கிரியுல்ல ஆடையகத்தில் ஆடைகள் வாங்கியுள்ளனர். 29,000 ரூபா பெறுதமதியான ஆடைகள்- ஒன்பது வெள்ளை நிற ஆடைகளும் அடங்கலாக- வாங்கினர். அவர்கள் நேராக நிந்தவூரிலுள்ள வாடகை வீட்டு மறைவிடத்திற்கு வந்தனர். அங்கு சஹ்ரானின் தாய், தந்தையர்களும் வந்தனர்.
இதேகாலப்பகுதியில் சாய்ந்தமருது, சம்மாந்துறை பகுதிகளிலும் வாடகை வீடுகளை பெற்றிருந்தனர். சம்மாந்துறை வீட்டில் சில வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்தனர். அங்கிருந்த வாகன சாரதியொருவருக்கு நிந்தவூரில் இருக்கும் பதுங்கிடம் தெரியும்.
சம்மாந்துறை வீட்டை பாதுகாப்பு தரப்பினர் முற்றுகையிட்ட செய்தியை அறிந்ததும், அவர்கள் சாய்ந்தமருதிற்கு 26ம் திகதி மாலையில் சென்றார்கள்.
இன்றையதினமே சாய்ந்தமருது வீடு முற்றுகையிடப்பட்டது.
இதில் சஹ்ரானின் மனைவி, மகள் மட்டுமே தப்பித்தனர். மிகுதி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் சஹ்ரானின் மூத்த மகனும் அடக்கம்.
வாசகர் கவனத்திற்கு- ஐ.பி.சி உரிமையாளர் பாஸ்கரன் கந்தையாவின் இன்னொரு ஊடக வலையமைப்பான லங்காசிறி, தமிழ் வின், ஜேவிபி இணையத்தளங்கள், தமிழ்பக்க செய்திகளை திருடி வெளியிடுவது வழக்கம். உடனடி செய்திகளை அறிந்து கொள்ள, தமிழ்பக்கத்திற்கு வாருங்கள்.

Post a Comment

0 Comments