Home » » இலங்கையில் வாழ்ந்த பெரும் கற்கால மனிதர்கள் யார் தெரியுமா? பிரமிக்கவைக்கும் ஈழத்தமிழனின் சான்றுகள்!

இலங்கையில் வாழ்ந்த பெரும் கற்கால மனிதர்கள் யார் தெரியுமா? பிரமிக்கவைக்கும் ஈழத்தமிழனின் சான்றுகள்!

தமிழர் தாயகத்தின் தென் தமிழீழம் அல்லது இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் ஆதித் தமிழ்க் குடிகளான பெரும் கற்கால மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் சின்னங்கள் அழிவடையும் நிலையில் காணப்படுவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களது புராதன சின்னம் என்பதனால் சிறிலங்கா அரசின் தொல்பொருள் திணைக்களம் இதனைப் பாதுகாப்பதிலிருந்து தவறிவருவதாக பிரதேச மக்கள் அங்கலாய்த்துள்ளனர்.
ஈழத் தமிழரின் ஆதிக் குடிகள் எனப்படும் நாகர்கள் பெருங் கற்கால மனிதர்களாக வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குடியிருப்புக்கள் விரவிக் காணப்பட்டதாக கூறப்படும் அம்பாறையின் காட்டுப் பகுதி ஒன்றில் இந்த தொல்பொருள் சின்னங்கள் சிதைவடையும் நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையின் சங்கமன்கந்தை எனப்படும் பிரதேசத்திலிருந்து மேற்கே காட்டுப்புறமாக இந்த பழம்பெரும் சின்னங்கள் காணப்படுவதுடன் இவை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தையும் பிற்பட்ட காலத்தையும் குறித்து நிற்பதாக நம்பப்படுகிறது.
குறித்த பகுதி மலைப்பாங்கான இடமாக இருப்பதுடன் அங்கு அடிக்கடி சட்டவிரோதமான புதையல் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் இதனால் புராதன சின்னக்கள் அழிவடையும் நிலையில் இருப்பதாகவும் பொதுமக்களால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் அந்த பிரதேசத்தினை தனது கட்டுபாட்டின்கீழ் கொண்டுவந்தபோதிலும் இதுவரை அதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் இறங்காதது ஏன் என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
பெரும் கற்கால மனிதர்களால் பாவனைக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் பாறையில் குடைந்த நேர்த்தியான தொட்டிகள் மற்றும் குழிகள் என்பன இந்த பகுதியில் காணப்படுகின்றன.
மேலும் கல்லறைகள், நடுகல் அடையாளங்கள், பாறைத் தூண்கள், கல்வெட்டுக்கள் என்பனவும் ஆங்காங்கே காணப்படுகின்றன.
முக்கியமாக இந்தப் பகுதியில் காணப்படும் நடுகல் சின்னங்களானது புராதன தமிழ் மொழியினைப் பேசிய மக்களின் இருப்புக்கு மிகப்பெரிய சான்றாதாரமாக விளங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், பேராசிரியர் பத்மநாதன் குறிபிடுகின்றார்.
நடுகல் பண்பாடானது இரும்புக் காலம் எனப்படும் பெரும் கற்கால மனிதர்களுக்குரியதென கூறும் அவர், இலங்கையில் பூர்வ குடிகள் எனப்படும் நாகர்களே இந்த முறைமையினைப் பின்பற்றிவந்ததாக சான்றுபகர்கிறார்.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் பானை ஓடு ஒன்றில் தமிழ் பிராமி எழுத்துக் காணபட்டதாகவும் இதனை தென்னிந்திய ஆய்வாளர்கள் உறுதி செய்ததாகவும் அவர் கூறுகின்றார்.
இதனடிப்படையில் இலங்கையில் சிங்களவர்களின் புராதன சின்னங்களைப் பாதுகாக்கும் அதே ஆர்வத்தினை தமிழரின் புராதன சின்னங்களையும் பாதுகாப்பதற்கு இலங்கையின் தொல்பொருட்கள் திணைக்களம் செலுத்தவேண்டும் என பலரும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
செய்வார்களா என்பதைக் காலம்தான் பதில்சொல்லும்....
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |