Home » » இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது! - ஐ.நாவுக்கு 5 தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது! - ஐ.நாவுக்கு 5 தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை.

ஐ.நாவில் இலங்கைக்குக் காலஅவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை உட்பட மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி ஜெனிவாவுக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு 5 தமிழ்க்கட்சிகள் கூட்டாக இணக்கம் கண்டுள்ளன. ஜெனிவா விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக - அதன் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியவற்றுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகியனவே கூட்டாக இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளன.
இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கை உட்பட மூன்று கோரிக்கைகள் அடங்கிய அந்தக் கடிதத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளனர்.
புளொட் தலைவர் த. சித்தார்த்தன் அந்தக் கடிதத்தில் இன்று கையெழுத்திடுவார் எனத் தெரியவருகின்றது.
ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள இந்தக் கடிதத்தில், இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, இலங்கை விவகாரத்தை ஐ.நா. பொதுச் சபைக்குக் கொண்டு செல்வதன் ஊடாக இலங்கையைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் அல்லது ஐ.நா. நியமிக்கும் விசேட நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்,இலங்கை விடயத்தைக் கையாள்வதற்கு தனி அறிக்கையாளர் ஒருவரை ஐ.நா. நியமிக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளே உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜெனிவா விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுக்கு மாறாக 5 தமிழ்க் கட்சிகள் இணைந்து கூட்டாக இந்தக் கடிதத்தை அனுப்பி வைக்கவுள்ளன. இதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியவையும் உள்ளடங்கியிருக்கின்றமை கூட்டமைப்புக்குள் சிக்கலை உருவாக்கியிருக்கின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |