Home » » மஹிந்த அரசாங்கம் இனி இல்லை : ஜனாதிபதிக்கு அதிரடி அறிவிப்பு விடுத்த சபாநாயகர்

மஹிந்த அரசாங்கம் இனி இல்லை : ஜனாதிபதிக்கு அதிரடி அறிவிப்பு விடுத்த சபாநாயகர்

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரகாரம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதாகவும் அரச தலைவர் அனுப்பியுள்ள கடிதத்தில் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதலாவது பிரிவில் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையை நீக்கி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முன் செல்லுபடியற்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா அரச தலைவரின் கோரிக்கைக்கு அமைய இந்த பிரிவு நீக்கப்பட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று இன்று கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க சமர்ப்பித்ததுடன், அதனை விஜித் ஹேரத் வழிமொழிந்திருந்தார்.
பின்னணி
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைக்கும் ஸ்ரீலங்கா அரச தலைவரின் விடேச வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவு விதித்தை அடுத்து மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக கடந்த 14 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
அன்றும் மஹிந்த ஆதரவு ஆளும் தரப்பினர் கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டதை அடுத்து பெயர் குறிப்பிட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்தப் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அரசியலமைப்பின் 48(2) சரத்திற்கு அமைய தற்போது அமைச்சரவை தற்போது இல்லாது போயுள்ளதாக கடந்த 15 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பை அடுத்த கட்சித் தலைவர்களை சந்தித்த ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதலாவது பிரிவை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியிருந்தார்.
எனினும் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான இரண்டாவது பிரிவை நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கட்சித் தலைவர்களை கோரியிருந்தார்.
முதலாவது பிரிவில் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையை நீக்கி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டத்திற்கு முன் செல்லுபடியற்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்பிரகாரம் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முதலாவது பிரிவை தவிர்த்து இரண்டாவது பிரிவை மாத்திரம் நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் இன்று நாடாளுமன்றம் கூடியிருந்தது.
எனினும் மஹிந்த ஆதரவு ஆளும் தரப்பினர் சபாநாயகரின் அக்ராசனத்தை ஆக்கிரமித்ததுடன், சபாநாயகர் மற்றும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த களேபரத்திற்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பிற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்ததுடன், அந்தப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |