நாடாளுமன்றத்தை நேற்று நள்ளிரவுடன் கலைத்து பொதுத் தேர்தலை அறிவித்துள்ள ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுகளுக்கு அரசியல் யாப்பு தொடர்பான சட்டநிபுணர் லால் விஜேநாயக்க கடும் கண்டனங்களை வெளியிட்டிருக்கின்றார்.
ஸ்ரீலங்கா அரச தலைவரின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சாசனத்திற்கும், அடிப்படை சட்டத்திற்கும் முரணானவை என்று புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவராக கடமையாற்றிய சட்டநிபுணர் லால் விஜேநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவின் அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடுகளினால் ஸ்ரீலங்கா மீதான சர்வதேசத்திற்கு காணப்பட்ட நற்பெயர் கலங்கப்படுத்தப்பட்டு விட்டதுடன், சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கவிருந்த பெருந்தொகையான உதவிகளும் இடைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவரான மஹிந்த ராஜபக்சவை ஒக்டோபர் 26ஆம் திகதி அதிரடியாக பிரதமராக நியமித்த அரச தலைவர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து உருவாக்கியிருந்த நல்லாட்சி அரசாங்கத்தையும் முடிவுக்கு கொண்டுவந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 27ஆம் திகதி சனிக்கிழமை நாடாளுமன்ற அமர்வுகளை நவம்பர் 16ஆம் திகதிவரை ஒத்திவைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலுமிருந்து எழுந்த கடும் எதிர்ப்புக்கள் மற்றும் அழுத்தங்களையடுத்து நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டாலும் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியம் தமக்கு இல்லையென புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ச தரப்பினர் கூறிவந்தனர்.
எனினும் இதனை நிராகரித்த ரணில் விக்கிரமசிங்க தரப்பினர், அன்றைய தினம் தாங்கள் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தே தீருவோம் என சூளுரைத்துவந்தனர்.
நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் பிரதமர் தொடர்பான வாக்கெடுப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு கோரிக்கை விடுத்தன.
இந்த குழப்பத்திற்கு மத்தியில் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்றுக்கொள்ளுமாறு சிறுபான்மையினக் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களை அழைத்து ஸ்ரீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பேரம் பேசியிருந்தார்.
ஆனால் மஹிந்தவின் நியமனம் அரசியல் யாப்பிற்கு முரணானது என நேரடியாக தெரிவித்திருந்த சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள், மஹிந்தவிற்கு எந்தவிதத்திலும் ஆதரவளிக்க முடியாதென்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து நவம்பர் 8ஆம் திகதி இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபை மற்றும் செயற்குழுக் கூட்டத்தில் மஹிந்தவை பிரதமராக ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு தகுந்தபாடம் கற்பிப்பதாக அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கையும் விடுத்தார்.
குறிப்பாக இதுவரை ஒருதுரும்புச் சீட்டையே பயன்படுத்தியதாகவும் தேவைப்படும் பட்சத்தில் பயன்படுத்துவதற்கு தன்னிடம் மேலும் பல துரும்புச் சீட்டுக்கள் கைவசமிருப்பதாகவும் ஸ்ரீலங்கா அரச தலைவர் சுதந்திரக் கட்சியினர் முன்னிலையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்ட மறுநாளான நவம்பர் 9ஆம் திகதி இரவு 8 மணியளவில் நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவை விடுத்த மைத்திரிபால சிறிசேன, 2019ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதாகவும் அதிரடியாக அறிவித்தார்.
இதற்கான அறிவிப்புக்களை விடுப்பதற்கு முன்னதாக அரச அச்சகக் கூட்டுத்தாபனம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள்ளும் அவர் கொண்டுவந்திருந்தார்.
ஏற்கனவே அவரது கட்டுப்பாட்டிலேயே பாதுகாப்பு அமைச்சு இருக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை என்று கண்டனம் வெளியிட்டிருக்கும் சட்டநிபுணர் லால் விஜேநாயக்க, சர்வாதிகாரத்துடன் செயற்படும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணியினருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள் என்றும் எச்சரித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமரை மாற்றுவதற்கு ஜனாதிபதி எடுத்த நடவடிக்கையானது அரசியலமைப்பிற்கு முரண் என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும் இது சட்டரீதியானது என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார். அரசியலமைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பின் படி இது சட்டவிரோதமானது என்றும் ஆனால் சிங்கள மொழிக்கு அமைய சரியானது எனவும் இறுதியில் அவரே ஏற்றுக்கொண்டார்.
ஆங்கிலத்திலிருந்து சிங்களம் என்று வார்த்தைக்கு வார்த்தை அரசியலமைப்பை வியாக்கியானம் செய்ய முடியாது. அதன் அர்த்தத்தைமட்டுமே பார்க்க வேண்டும். ஆகவே பிரதமரை மாற்றுவது குறித்த அதிகாரம் 19ஆவது திருத்தம் கொண்டுவருவதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த போதிலும் பின்னர் அது நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. இதன்படி 19ஆவது திருத்தத்திற்கு அமைய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுதான் பிரதமரை நீக்க முடியும்.
மற்றபடி பிரதமர் இராஜினாமா செய்தாலே ஒழிய வேறு வழியில் மாற்றமுடியாது. இரண்டாவதாக சபை ஒத்திவைப்பு இடம்பெற்றது. நாடாளுமன்றத்தை 2 மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. எனினும் சர்வதேசம் ஏற்றுக் கொள்கிற நவீன நாடாளுமன்ற முறையான பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக இரண்டு விதமாக சபை ஒத்திவைக்கப்படும். ஒன்று அமர்வுகள் முடிந்த பின்னரும் இரண்டாவது ஒழுங்குப் பத்திரத்தை ஒழுங்குப்படுத்துவதற்காகவும் சபை ஒத்திவைக்கப்படும்.
ஜனாதிபதியினால் தனியாக தீர்மானம் எடுக்க முடியாது. சபாநாயகருடனும், பிரதமருடனும் பேச்சு நடத்தியே சபை ஒத்திவைக்க முடியும். எனினும் தற்போது சபை ஒத்திவைப்பானது எவருடனும் பேச்சு நடத்தாமல் ஜனாதிபதி மேற்கொண்டார். இது சட்டவிரோதமான விடயமாகும். மஹிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 114 உறுப்பினர்கள் இல்லாதபடியினால்தான் சபை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டவிரோத செயற்பாட்டிற்கே சபை ஒத்திவைக்கப்பட்டது. சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு எந்த வழியிலும் பெரும்பான்மையை தயார்படுத்திக்கொள்ள இயலுமானால் பணம்கொடுத்தாவது உறுப்பினர்களைப் பெறுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பமளித்துள்ளார். இது நாடாளுமன்ற சம்பிரதாயத்தை முழுமையாக மீறுகின்ற விடயமாகும். எனவே இதனை மையப்படுத்தி ஜனாதிபதிக்கெதிராக குற்றப்பிரேரணை கொண்டுவர முடியும்.
ஒருவரை சேர்ப்பதற்கு 500 மில்லியன் ரூபா கோரப்பட்டதாகவும் அறிந்தேன். அப்படி செய்தும் வந்தவர்கள் திரும்பிச் செல்ல நேரிட்டதால் 14ஆம் திகதி சபை கூட்டினால் பெரும்பான்மை நிரூபிக்க முடியாது போகும். அப்படியிருந்தால் பிரதமர் பதவி பறிக்கப்படும். அதற்கு முன்னர் சபை கலைக்கப்பட்டது.
இதுவும் சட்டவிரோத விடயமாகும். சபை கலைப்பானது நாடாளுமன்றம் நான்கரை வருடங்களுக்குப் பின்னரே முடியும். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிற்குப் பின்னரே கலைக்க வேண்டும். அல்லாவிட்டால் நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்றால் சபையை கலைக்க முடியும். இவ்விரண்டும் ஏற்படாமலேயே ஜனாதிபதி சபையை கலைத்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, சர்வதேச அளவில் பெரும் முயற்சிகளுடன் கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா மீதான நற்பெயர் மைத்திரி – மஹிந்த அரசினால் கலங்கடிக்கப்பட்டு விட்டதாக கவலை வெளியிட்டார்.
சர்வதேசத்திற்கு முன்பாக எமது விம்பம் வீழ்ந்து போய்விட்டது. மஹிந்த ராஜபக்சவுக்கு அப்போது எத்தியோப்பியா போன்ற நாடுகளிலிருந்தே அழைப்புக்கள் வந்தபோதிலும் ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடுகளிலிருந்து வாழ்த்துக்கள் கூட வரவில்லை. சீனாவும் கூட இதனை வரவேற்றுக் கூறவில்லை. வீழ்ந்து போயிருந்த விம்பம் ரணில் விக்கிரமசிங்கவினால் தூக்கிநிறுத்தப்பட்டது.
அதனால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைத்தது. ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளும் வரவேற்றன. சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கிடைக்கவிருந்த 350 பில்லியன் டொலர்கள் உட்பட பல நாடுகள் வழங்கவிருந்த உதவிகளும், செயற்திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டுவிட்டன. பொருளாதாரம் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்த அரச தலைவர்கள் அனைவரும் படுதோல்வியடைந்ததை நினைவுபடுத்திய சட்டத்தரணி லால் விஜேநாயக்க, அடுத்த பொதுத் தேர்தலில் மைத்திரி – மஹிந்த அரசிற்கு தக்கபாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் சூழ்நிலையை மாற்றியமைப்பதற்கு மக்கள் முன்வர வேண்டும். இதுதான் சிறந்த வழி. நீதிமன்றம் சென்றாலும் அதன்பிறகு வரும் உத்தரவை அவர்கள் அமுல்படுத்தாவிட்டால் என்ன செய்வது? ஷிரானி பண்டாரநாயக்க விவகாரத்திலும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றமாட்டேன் என்று சொன்னார்கள்தானே.
மக்கள் செய்ய வேண்டியது இதனை மறுபுறத்திற்கு மாற்றுவதே ஆகும். மக்களின் வாக்குரிமையில் இதற்கு பதிலடி வழங்க வேண்டும். வீதிக்கு இறங்கி போராடுங்கள் என நான் கூறப்போவதில்லை. வேறு நாடுகளில் ஆயுதங்கள் ஏந்தி போராடுவார்கள். ஆனால் எமது நாட்டு மக்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதில் பழக்கப்பட்டவர்கள்.
ஜனவரி 8ஆம் திகதி, 1970ஆம் ஆண்டில், 1977ம் ஆண்டில் பயன்படுத்தியுள்ளார்கள். வரலாற்றில் யாராவது நிறைவேற்றதிகாரியாக மாறுவதற்கு முயற்சித்தபோது அவர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள். சுதந்திரக் கட்சியின் பீலிக்ஸ் ஜயசேகர நிறைவேற்றதிகாரியாக மாறுவதற்கு முயற்சித்தபோது 77களில் படுதோல்வியடைந்தார்.
அதேபோல பிரேமதாஸவும் நிறைவேற்றதிகாரியாக மாறுவதற்கு 1994ஆம் ஆண்டில் முயற்சித்தபோது படுதோல்வியடைந்தார். மேலும் மஹிந்த ராஜபக்சவும் இதனை முயற்சித்து 2015ஆம் ஆண்டில் தோல்வியைத் தழுவினார். எனவே எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகாரத்தை ஸ்ரீலங்கா மக்கள் நிராகரித்துதான் வந்திருக்கிறார்கள் எனத் தெரிழவித்தார்.
0 Comments