Advertisement

Responsive Advertisement

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறது கூட்டமைப்பு!

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தாம் சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் நிலைப்பாடுகளை நேரடியாக தெரிவிப்பதற்காகவே ஜனாதிபதியுடனான சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இன்றைய நிலைமையில் மஹிந்த மற்றும் ரணில் என இரு தரப்பினரும் எங்களது கட்சியுடன் பேசியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் சந்திப்பில் தமிழ் மக்கள் நலன் சார் விடயங்கள் தொடர்பில் உடன்பாடுகள் அல்லது எழுத்து மூலமான உறுதிமொழிகள் வழங்கப்பட்டால், புதிய பிரதமர் நியமனத்திற்கு எதிராக வாக்களிக்கும் கூட்டமைப்பின் முடிவில் மாற்றங்கள் ஏதும் ஏற்படுமா என வினவப்பட்டதற்கு பதிலளித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் கூட்டமைப்பு தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும். அதன் பின்னர் அது தொடர்பான உறுதிமொழிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் வழங்கட்டும் அதன் பின்னர் முடிவில் மாற்றம் ஏற்படுத்துவதை பற்றி பார்ப்போம் என்றார்.
எம்மைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி கூட்டமைப்பை கலந்துரையாட அழைத்திருப்பது தமிழ் மக்கள் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அல்ல. அது குறித்து கூட்டமைப்புக்கு தெரியும். ஆனால் அவருடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தத் தான் எண்ணியுள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலேயே அவரை சந்திப்பதற்கான கூட்டமைப்பு செல்கின்றது. அதைதவிர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை ஏன் உங்களுடைய பக்கம் இழுத்தீர்கள் என்று நேரில் கேட்க வேண்டிய தேவையும் கூட்டமைப்புக்கு உள்ளது என்றார்.

Post a Comment

0 Comments