Home » » இன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்தஉற்சவம் ஆரம்பம்

இன்று பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் வருடாந்தஉற்சவம் ஆரம்பம்

செ.துஜியந்தன்

இந்து மதத்தின் தொன்மை இலக்கியமாக போற்றப்படும் இதிகாசமாகிய மகாபாரதக் கதையுடன் தொடர்புபட்ட பழம்பெரும் கிராமமான பாண்டிருப்புக் கிராமத்தில் கோவில் கொண்டு வீற்றிருக்கும் இங்குள்ள விஸ்வப்பிரம்ம குல மக்களால் போற்றி வழிபடப்படுகின்ற சக்திவாய்ந்த தெய்வமாக ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை (14) ஆம் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகவுள்ளது!

ஆலய பிரதம பூசகர் விஸ்வப்பிரம்ம ஸ்ரீ செ.செல்வகுமார் தலைமையில் தொடர்ந்து எட்டு தினங்கள் உற்சவம் நடைபெறவுள்ளது. இதில் எதிர்வரும் 19 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வீரகம்பம் வெட்டுதல் நிகழ்வும் பகல் 12.30 மணிக்கு விசேட பூசை வழிபாடுகளும் மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ அரசடி அம்பாள் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து அம்மனின் வாழைக்காய் எழுந்தருளப்பண்ணல் நிகழ்வு நடைபெறவுள்ளது. 
20 ஆம் திகதி காலை 8 மணிக்கு பால்குட பவனி இடம் பெற்று அம்பாளின் திருவுருவச் சிலைக்கு அடியார்கள் பால்வார்க்கும் வைபவம் நடைபெறவுள்ளது.  21ஆம் திகதி காலை 7 மணிக்கு நோர்பு நெல் நேர்தல் நோர்ப்பு நெல் குற்றுதல் இடம் பெற்று பகல் 1 மணிக்கு மஹாயாகம் சக்தி பூசை மாலை 5 மணிக்கு நோர்ப்புக் கட்டுதல் கடல் தீர்த்தமாடுதல் நள்ளிரவு 12 மணிக்கு தீ மூட்டுதல் ஆகியன இடம் பெறவுள்ளது. 
22 ஆம்திகதி காலை 7 மணிக்கு தீ மிதிப்பு வைபவம் இடம் பெற்று ஆயுத பூசை வாழிபாடுதலுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது. 
இதேவேளை 12 ஆம் திகதி புதன்கிழமை காலை 6.30 தொடக்கம் 7.28 மணி வரைக்கும் உள்ள சுபவேளையில் அலங்கார அழகிய புதிய ஆலய நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் புதுமையும் பழமையும் கொண்ட மகா சக்தி ஆலயமாக விளங்குகின்றது. தற்போது ஆலயம் அமையப்பெற்றுள்ள இடம் முன்னர் ஆலை அரசு வேம்பு கொக்கட்டி நாவல் லாக்கடை என மரச்சோலைகள் அமையப் பெற்றிருந்த இடமாக இருந்துள்ளது. 
இவ் ஆலய வரலாறு தொடர்பில் கிராமத்தவர்களான மறைந்த  காத்தான்பிள்ளை இராசையா  கந்தையா இரசாரெத்தினம் ஆகியோர் நேரில் கண்ட சாட்சிகளாக அம்பாளின் அற்புதம் பற்றிக் கூறியுள்ளனர். அவர்கள்  சிறுவர்களாக இருக்கும் போது காட்டுப்பகுதியில் வந்து விளையாடும் போது ஒரு நாள் காலை  அங்கே சென்ற சமயம் அழகான ஒரு  பெண் உருவம் அங்கிருந்த நாவல் மரத்தின் கீழ் நின்று அருகே காணப்பட்ட மடுவில் சென்று  மறைந்துள்ளது. இரண்டு நாட்களின் பின்அங்கே சென்று பார்த்தபோது அதே பெண்ணுருவம் அங்கு நின்ற நொக்கொட்டியா மரத்தினுள் மறைந்துள்ளது. இந்த மரத்தின் கீழேதான் பரிவார தெய்வங்களுள் ஒன்றான  இப்போதைய நாகதம்பிரான் கோவில் அமைந்துள்ளது. 
இவர்களுக்கு கனவில் காட்சியளித்த அம்மன் அந்த இடத்தில் ஆலயம் அமைக்குமாறும் அதற்கு அடையாளமாக அங்கே உள்ள பற்றை ஒன்றில் சிவப்பு நிறப்பட்டுத்துண்டொன்று போடப்பட்டுள்ளது எனச் சொல்லி மறைந்துள்ளார். அதன் பின்னர் கந்தையா பூசகரிடம் விடயத்தைக் கூறியவிட்டு அவரையும் அழைத்துக்கொண்டு அக் காட்டுக்குள் சென்றனர். 
அங்கு காட்டுப்பகுதியில் நின்றிருந்த நாவல் மரத்தடியை அண்மித்ததும் அதற்க்கப்பால் நடக்க முடியாது இருந்துள்ளது.   அம்மன் கனவில் தோன்றி அருளிய இடமும் அதுவாகவே இருந்துள்ளது.  பின் அவ்விடத்தில் எல்லைக்கோடு ஒன்றினை வரைந்து அங்கே ஆலயம் அமைப்பது என சென்றவர்கள் முடிவெடுத்தனர். அதன் பின் விஸ்வப்பிரம்ம குலத்தவர்களினால் ஆலயம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. 
இங்கு ஆலயப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் கிணறு வெட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுள்ளது . இவ் வேளையில் கிணற்றுக்கான கொட்டு இறங்காமல் இருந்துள்ளது இதனைப் பார்த்த பூசகர் ஒரு பூவும்இ தேங்காயும்இ கற்பூரமும் எடுத்து கிணற்றுக் கொட்டில் வைத்து சில மந்திரங்கள் சொல்லி தேங்காய் வெட்டிய போது கிணற்றுனுள் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் காலில் ஏதோ ஒன்று தட்டுப்பட்டுள்ளது அப்போது மிக அவதானமாக பார்த்தபோது அங்கே அற்புதமான ஒரு அம்மன் சிலையைக் கண்டெடுத்தனர். அச் சிலையை வைத்துத்தான் இதுவரை காலமும் பூசை செய்துவருகின்றனர். 
இவ் ஆலயத்தின் தல விருட்சமாக அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நின்றிருந்த கொக்கட்டி மரம் வேம்பு மரம் ஆகியன அமைந்துள்ளன. கடந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போதும் இத் தல விருட்சமான வேம்பு அழிவடையாமல் அப்படியே நிற்பது ஆச்சரியமாகவுள்ளது. பலரது பிணி தீர்க்கும் அரும் மருந்தாக இங்குள்ள வேம்பு அமைந்துள்ளது. இவ் வேம்பு மரத்தினுடைய இலைகள் கசப்புத் தன்மை இல்லாதிருப்பதுடன் அம்மனை நாடிவந்தோர் பிணி தீர்க்கும் சஞ்சீவியாக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 
பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயத்தின் பூசை முறைகள் கிராமிய வழிபாட்டு முறையிலான பத்ததியாகும். இதில் முழுமையாக தமிழ் மொழியிலே மந்திர உச்சாடனங்கள் நடைபெறுகின்றன. அத்துடன் வுழிபாட்டை நடத்தும் பூசகர்கள் திரு நீற்றை திரிபுண்டர முறையில் பூசி கழுத்திலும்இ சிரசிலும்    உருத்திராக்க மாலையுடன் காணப்படுவார்கள். கைகளில் சூலம்இ வெள்ளிப் பிரம்புஇ கைச் சிலம்புஇ கை மணிஇ சாட்டை என்பவற்றை வைத்திருப்பார்கள். சடங்கு காலங்களில் குறித்த தெய்வங்களுக்கு மந்திரங்கள் மூலம் மடை பரப்பி பக்தியுடன் வேண்டுவார்கள். 
தெய்வம் ஆடுபவர்களுக்கு உரிய மந்திரங்கள் மூலம் உருக்கொடுப்பார்கள். ஆடாத தெய்வங்களையும் ஆடச்செய்யும் அற்புதத்தை இங்கே காணலாம். உற்சவ காலங்களில் பிரதானமாக மூன்று காலப் பூசைகள் இடம்பெறுகின்றன. இதில் விடியற்காலையிலும்இ மதியவேளைகளிலும் நடைபெறுகின்ற பூசைகளின் போது உருக்கொடுக்கப்பட்ட தெய்வங்கள் ஆடுபவர்கள் மூலம் குறிப்பிட்ட பக்தர்களைத் தேர்ந்தெடுத்து அருள்வாக்கு கூறுதல்இ பூசகர்கள் மூலம் தெளிவுபடுத்தப்படல் இவ் ஆலயத்தின் பிரதான நிகழ்வாகும். அம்மனிடம்  அருள்வாக்கு கேட்பதற்கென்றே பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதைக் காணலாம்  
வேண்டுவோர் வினைகளை வேரறுக்கும் வேப்பிலைக்காரியாக பாண்டிருப்பில் அமைந்து வரம் அருளும் ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் பாதம் பணிவோர்க்கு தொல்லைகள் அகன்று இன்பங்கள் வாழ்வில் சூழும் என்பதில் ஐயம் இல்லை.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |