Home » » பாண்டிருப்பில் அருகிவரும் மட்பாண்ட கைத்தொழில்

பாண்டிருப்பில் அருகிவரும் மட்பாண்ட கைத்தொழில்

செ.துஜியந்தன்

அக்காலத்தில் மண் சட்டியில் சோறு, கறி சமைத்து வாய்க்கு ருசியாக சாப்பிட்டு நோயற்ற வாழ்க்கையை அம் மக்கள் வாழ்ந்தார்கள். மட்பாண்ட தொழிலையே தமது சீவனோபாயமாக கொண்டு வாழ்கை நடத்துபவர்களும் எம் மத்தியிலுள்ளனர். இத் தொழிலாளர்கள் பல்வேறு கஷ;டங்களுக்கு மத்தியிலே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்புக் கிராமம் ஒரு காலத்தில் மட்பாண்ட உற்பத்திக்கு பேர்போன கிராமமாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் களி மண்ணிலான பாத்திரங்கள் நாட்டின் நாலா பகுதிக்கும் எடுத்துச்செல்லப்பட்டு  விற்பனை செய்யப்படுகின்றது. 
பாண்டிருப்பு மக்கள் அன்று தொடக்கம் இன்று வரை குடிசைக்கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான ஜீவனோபாயத் தொழிலாகச் செய்துவருகின்றனர்.  இங்கு உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானை, முட்டி, உலை மூடி, குண்டான் சட்டி, கூஜா போனற பொருட்கள் அழகும் நேர்த்தியும் மிக்கவை. தரத்தில் மிகச் சிறந்ததாகவும் விளங்குகின்றன. 
இம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு கை கொடுக்கும் மட்பாண்ட தொழிலுக்கு எவரும் கை கொடுக்க முன்வராத நிலையில் இதனை நம்பிவாழும் பல குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். பலர் இத் தொழிலை கை விட்டுள்ளனர். 
மண் சட்டியில் சோறு, கறி சமைத்து சாப்பிடும் ருசியே தனி ருசிதான். வெகுவிரைவில் உணவுகள் பழுதடைந்து விடாது. பக்கவிளைவுகள் எதுவும் மண் பாத்திரங்களை பயன்படுத்தினால் ஏற்படுவதில்லை. இன்றை காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கும், இலகுவாக வேலைகளைச் செய்து கொள்வதற்கும் என வித விதமான அலுமினியப் பாத்திரங்களில் உணவுகளை அவசர அவசரமாக சமைத்து உண்டு வருகின்றார்கள். 
அலுமினிப் பாத்திரங்களில் சமைத்து சாப்பிடும் போது அதிலுள்ள நச்சுத் தன்மைகள் உணவிலும் கலந்து கொள்கின்றது இன்று களி மண்ணினால் செய்யப்பட்ட பாத்திரங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பழைய மண் வாசனையைப்பற்றி எவருக்கும் தெரியவாய்ப்பில்லைதான். 
கிராமிய குடிசைக் கைத்தொழில் விருத்திக்கு அரசு பல திட்டங்களை முன்வைத்து வருவதாக கூறுகின்ற போதிலும் குடிசைக் கைத்தொழில் விருத்தியடைந்ததாக தெரியவில்லை. காலங்காலமாக இம் மக்களைச் சூழ்ந்திருக்கும் வறுமையும், ஏழ்மையும் இன்றும் அவர்களை விட்டுபபோகவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் பாண்டிருப்பில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மட்பாண்டங்களை உற்பத்தி செய்யும் தொழிலிலே ஈடுபட்டனர். 
இன்று இவ்வாறான ஒரு நிலையைக் காணமுடியவில்லை. நாகரீகம் வளர்ச்சியடைய இத்தொழிலை செய்பவர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டதினால் பலர் இத்தொழிலை கைவிட்டுள்ளனர். இன்று குறிப்பிட்டுக் கூறக்கூடியளவிற்கு 65 குடும்பங்கள் மாத்திரமே மட்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 35 வருடங்களாக லட்சுமி என்பவரும் இத்தொழிலைச் செய்து வருகின்றார். அவர் வீட்டிற்குள் நுழையும் வாசலிலே களி மண் வெயலில் காயப்போடப்பட்டிருந்தது. செய்யப்பட்ட சட்டி பானைகளும் வெயிலில் கிடந்தது. மட்பாண்ட உற்பத்திக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவரது வளவில் பரவிக்கிடந்தன.  லட்சுமியம்மாவின் கையில் கிடைக்கும் ஒரு பிடி களிமண் சட்டியாகவும், பானையாகவும், முட்டியாகவும், மூடியாகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் உருமாறிக்கொண்டிருந்தது. 
முன்னரைப் போல் மட்பாண்ட தொழிலைச் செய்யமுடியாதளவிற்கு மனம் நொந்துபோயிருக்கின்றனர். தற்போது களிமண் ஒரு லோட் 8000 ரூபாவும், பட்டுமண் ஒரு சிறிய மெசின் லோட் 4000 ரூபாவும், ஆயிரம் உரிமட்டைக்கு 4000 ரூபாவும், வைக்கோல் 2000 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுக்ன்றது.இவற்றை இந்த விலை கொடுத்து பெற்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மக்கள் இந்த தொழிலைச் செய்கின்றனர். 
குறைந்த முதலீட்டில் கூடியவருமானம் ஈட்டித்தரும் சட்டி,பானைத் தொழிலுக்கு ஊக்குவிப்பை வழங்குவதற்கு இன்று வரை எமக்கு எவருமே உதவவில்லை என ஏக்கத்துடன் கூறுகின்றனர். 
'நாலு சட்டி பானவைச்சுத்தான் குடும்ப சீவியத்தக் கொண்டு போறம். வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்புச்செலவு என எல்லாவற்றையும் இதுல கிடைக்கிற வருமானத்த வைச்சுத்தான் ஒப்பேற்றுறம். வாறாக்கள் எல்லாரும் அதச் செய்வம் இதச்செய்வம் எண்டு சொல்லுறாங்க. படம் பிடிக்காங்க போறாங்க. ஒண்டும் செய்யிறாங்கல்ல'என்றார் சாந்திமணி. 
மட்பாண்ட உற்பத்திக்கு இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்புள்ளது. பாண்டிருப்பில் உற்பத்தி செய்யப்படும் சட்டி, பானைகளை கொள்வனவு செய்வதற்காக தென்னிலங்கையிலிருந்தும். பெருமளவிலான மக்கள் வருகின்றார்கள். 
இங்கு 200 தொடக்கம் 300 வரையான சட்டி, பானைகளை ஒன்றாக அடுக்கி ஒரு சூளையில் வைத்து சுட்டு எடுக்கின்றார்கள். இதில் 50 வரையான சட்டி பானைகள் உடைந்தும், வெடித்தும் கழிவாக போய்விடும். மொத்தமாக வியாபாரிகளுக்கு ஒரு சட்டி அதன் அளவிற்கு ஏற்ப 50 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனை செய்கின்றனர். ஏனையவை அதன் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு சூளையில் இருந்து 15 ஆயிரம் ரூபாவிற்கு  மேல் பணம் சம்பாதிக்கலாம் என லட்சுமி கூறுகின்றார். 
மட்பாண்ட தொழிலுக்கான சரியான வருமானத்தைப் பெற்றுக்கொள்ள அரசினாலோ, அரசசார்பற்ற நிறுவனங்களினாலோ, அரசியல்வாதிகளினாலோ இன்று வரை எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை. வங்கிகளில் கூட மட்பாண்ட தொழிலுக்கு கடனுதவிகள் வழங்கப்படுவதில்லை. மட்பாண்ட தொழிலில் ஈடுபடுபவர்களை மாற்றாந்தாய் மனப்போக்கிலும், ஏதோ இழிவான தொழில் செய்பவர்கள் போலவும் சிலர் பார்க்கின்றனர். 
கடந்த காலங்களில் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் ஏன்? பாராபட்சம் காட்டுகின்றது? என்று இவ்வூர் மக்கள் கேள்வியெழுப்புகின்றனர். 
இலங்கையில் முதன் முதலில் மட்பாண்ட உற்பத்தியில் ஈடுபடுபவர்களைக் கொண்டு சட்டி, பானைச் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு  அச்சங்கம் ஊடாக மட்பாண்ட உற்பத்தியாளர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்ட இடம் பாண்டிருப்பாகும். அருகிவரும் இவ் மட்பாண்ட குடிசைக்கைத் தொழிலை மீண்டும் கடடியெழுப்ப நல்லாச்சி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |