இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான கே. ரஞ்சன் சில்வா துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
இன்று (24) இரவு 8.30 மணியளவில் இரத்மலானை பிரதேசத்திலுள்ள ஞானேந்திர வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமுற்ற நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பலியான 62 வயதான கே. ரஞ்சன் சில்வா, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (மலர் மொட்டு) கட்சியின், தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் இது வரை அறியப்படவில்லை என்பதோடு, கல்கிஸ்ஸை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தை கேள்வியுற்ற, இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான வீரர்கள், தற்போது களுபோவில வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜூன் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள, மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 3 டெஸ்ட் போட்டித் தொடருக்காக நாளைய தினம் (25) மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாக இருந்த இலங்கை கிரிக்கெட் குழாமில் இடம்பெற்றிருந்த 26 வயதான தனஞ்சய டி சில்வா, தற்போது அதிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வலது கை துடுப்பாட்ட வீரரான தனஞ்சய டி சில்வா 13 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒரு நாள் மற்றும் 07 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் செல்வதற்கான விமானத்திற்கு 12 மணித்தியாலங்கள் இருந்த நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments