இதன் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியில் நிறைவு செய்யப்படவிருந்தபோதும் மக்களின் நன்மைக்காக ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின்பேரில் 11 மாதங்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது.
ஸ்பெய்ன் நிறுவனமொன்றும் உள்நாட்டு நிறுவனமொன்றும் நிணைந்து 2016 ஆம் ஆண்டு இந்த மேம்பாலத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்திருந்தன. இதற்காக 4,700 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது.
நான்கு வழிப்பாதைகளைக் கொண்ட இப்பாலம் 534 மீற்றர் நீளமானதாகும். இதனை அண்மித்த பல பாதைகள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் நாராஹேன்பிட்டவுக்கு பயணம் செய்வதற்கான மாற்றுப் பாதையொன்றும் புத்கமுவ திசையில் மூன்று பயணவழிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொறியியல் நியமங்களுக்கேற்ப நிர்மாணிக்கப்பட்டுள்ள இப்பாலம் இரும்பின்மீது கொங்ரீட் போடப்பட்டு அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது மேம்பாலமாக வரலாற்றில் இடம்பித்துள்ளதுடன் இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள அழகில மேம்பாலமாகவும் உள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கும் ராஜகிரிய முச்சந்தி வாகனநெரிசல் கூடிய பிரதேசமாக இருந்து வந்தது. இதன் காரணமாக இவ்வீதியில் வாகனங்கள் மணிக்கு சுமார் 2 கிலோமீற்றர் என்ற வேகத்திலேயே பயணிக்க வேண்டியிருந்தது. இப்பாலம் திறந்து வைக்கப்பட்டிருப்பதனால் ராஜகிரிய சுற்றுப் பிரதேசங்களில் நிலவும் வாகனநெரிசல் குறைவடைவதுடன் தற்போததைய வேக எல்லை முன்ரை விட எட்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரித் பாராயணம் செய்யப்பட்டு மேம்பாலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது. மேம்பாலத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதி அவர்கள் நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் மக்களுக்காக நாட்டில் முன்னெடுத்த அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களில் துரிதமாக நிறைவு செய்யப்பட்ட மற்றுமொரு முக்கிய திட்டமாக இதனைக் குறிப்பிட முடியும் எனத் தெரிவித்தார்.
சுதந்திரம், ஜனநாயககம், சமூக உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள், ஊடக சுதந்திரம் என்பவை பின்னடைந்திருந்த ஒரு யுகத்தில் நாட்டு மக்கள் புதியதோர் பயணத்தை மேற்கொள்வதற்காக 2015 ஜனவரி 08 ஆம் திகதி தன்னை நாட்டின் அரச தலைவராகத் தெரிவு செய்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்குப் பின்னரான மூன்று வருட காலப்பகுதியில் பல்வேறு சவால்களை வெற்றிகொண்டு இலங்கையை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேசமாக முன்னேற்றுவதற்கு தமக்கு முடியுமாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.
ஜனவரி 08 ஆம் திகதிய உன்னத புரட்சிக்கு தலைமைதாங்கிய முக்கிய ஆளுமையான சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் பெயரை இந்த மேம்பாலத்திற்கு வைப்பது பொருத்தமானதாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள் லக்ஷ்மன் கிரியெல்ல, சம்பிக்க ரணவக்க, வஜிர அபேவர்த்தன. மஹிந்த அமரவீர , இராஜாங்க அமைச்சர் திலான் பெரேரா, பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். -(3)


0 Comments