2008 முதல் இடம்பெற்ற பாரியளவிலான ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய சகலருக்கும் தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெள்ளவாயவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிணை முறி மோசடியில் இந்த அரசாங்கத்தில் தொடர்புடையவர்கள் மட்டுமன்றி 2008இல் இருந்து இருக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். 2008 முதல் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதியே அதிமாக மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுக்கான மகாபொல பணம் , காப்புறுதி பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவை மக்களின் பணமே. 2008இலிருந்து இந்த கொள்ளை நடந்துள்ளது. இதனை மறக்க கூடாது. மத்தியவங்கி கொள்ளையாளர்களுக்கு மட்டுமன்றி பாரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கும் எதிராக சட்டத்தின் முன் கொண்டு வந்து சிறையில் போட்டு தண்டனை வழங்க நான் நடவடிக்கையெடுப்பேன். தற்போது புதிய கட்சியை அமைத்துக்கொண்டு 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்ல வேண்டுமென கூறுகின்றார்கள். அப்படி நடந்தால் திருடர்களை பிடித்து முடிந்து , சட்டத்தின் முன்கொண்டு வந்து முடிந்தது. அவர்களுக்கு எதிரான அறிக்கைகள் , வழக்குகளை இல்லாது செய்யவே 2015க்கு முன்னால் செல்வோம் என்கின்றார்கள். எமது கட்சி அதற்கு இடமளிக்காது. பெப்ரவரி 10க்கு பின்னர் மீண்டும் வெற்றிப் பாதைக்கு செல்லும். என அவர் தெரிவித்துள்ளார்.


0 Comments