Advertisement

Responsive Advertisement

மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் சாதித்த யாழ். போதனா வைத்தியசாலை!

யாழ். போதனா வைத்தியசாலையில் முதன்முறையாக நடத்தப்பட்ட இருதய சத்திர சிகிச்சை அண்மையில் வெற்றியடைந்திருந்தது. இந்த சாதனையால், இலங்கையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை நடைபெறும் 4 அரச வைத்தியசாலைகளில் ஒன்றாக யாழ்.போதனா வைத்தியசாலை உயர்ந்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட திறந்த இருதய சத்திர சிகிச்சை முழுமையாக மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவி மற்றும் ஆலோசனை வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 20, 21ஆம் திகதிகளில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தன் தலைமையில் முதற்தடவையாக இதய நுரையீரல் மாற்றுவழி இயந்திரத்தினுடனான அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கு சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன்னர், கடந்த 1969 – 1970 காலப்பகுதிகளில் Dr.A.T.S.Paul தலைமையிலான குழு கொழும்பில் இருந்து வந்து யாழ். போதனா வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்றைய காலப்பகுதியில் இதயத்தின் செயற்பாட்டை நிறுத்தி மேற்கொள்ளும் சத்திரசிகிச்சைக்குரிய நவீன வசதிகள் காணப்படவில்லை.
தற்போது, அதிநவீன முறையில்நீண்டநேர சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சையை ஆரம்பிக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் போதியளவு ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கியுள்ளனர்.
புதிய ஆண்டில் முழுமையான ஆளணியினரை சுகாதார அமைச்சு நியமனம் செய்வதோடு புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
இதேவேளை, சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான இருதய சத்திரசிகிச்சைக்கான Cardiopulmonary Bypass Machine ஐ கொள்வனவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
தற்போது உள்ள வளங்களைக் கொண்டு போதனா வைத்தியசாலையில் வாரத்திற்கு 2 சத்திர சிகிச்சைகளை மாத்திரமே செய்து கொள்ளகூடியதாயுள்ளது.இருதய சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக தற்போது 360 இற்கும் மேற்பட்டவர்கள் பதிவுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

Post a Comment

0 Comments